திரு தாமஸ் சைமனுக்கு பொதுத் தேர்தல், திருமண அழைப்பிதழ்களை வழங்கும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது நான்கு பிள்ளைகளும், சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
ஒற்றைப் பெற்றோரும் வணிகருமான திரு தாமஸ், கடைசியாக சென்ற கிறிஸ்துமசுக்குத் தான் பிள்ளைகள் எல்லாம் வீடு திரும்பியுள்ளதாகக் கூறினார்.
அதுவும் நால்வரில் மூன்று பேர் முதன்முறைாயக இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.
மழை பெய்தபோதும் அவர்களுக்கு வாக்களிக்கும் உற்சாகம் குறையவில்லை.
வாக்களித்த பின்னர், காலை உணவு சாப்பிட்டுவிட்டு உறவினர் வீடுகளுக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டனர்.
"என் மகன் ஜோஷுவாவுக்கு ஜனவரியில் திருமணம் என்பதால் குடும்பமாகச் சென்று திருமண அழைப்பிதழ்களை வழங்கவுள்ளோம்," என்றார் திரு தாமஸ்.
மலேசியாவின் ஆகப் பெரிய நாடாளுமன்றத் தொகுதியான தெப்ராவில் அவர்கள் வாக்களித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவராகப் பணியாற்றும் மகள் வெரோனிகா தாமஸ், வேலையால் சோர்வாக இருந்தபோதும் வாக்களிக்க முடிவு செய்ததாகக் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களாக தம்மைப் போன்ற இளையர்கள் நாட்டு நடப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளதாகவும் தங்கள் கருத்துகள் கேட்டறியப்பட வேண்டும் என்பதற்காக ஊக்கத்துடன் வாக்களிப்பார்கள் என்றும் வெரோனிகா கூறினார்.


