மலேசியப் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜோகூரில் இன்று இரு வெவ்வேறு வாக்களிப்பு நிலையங்களில் பெண் வாக்காளர்கள் இருவர் இறந்துவிட்டனர்.
ஜோகூர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ஜுஹாரா சையது முகம்மது, 57, என்பவர் காலை 9.30 மணிக்கு எஸ்எம்கே சுல்தான் இஸ்மாயில் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின்னர் இறந்துவிட்டதாக தெரிவித்தது.
"மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மயங்கி விழுந்துவிட்டார். உடல்நலம் சரியில்லாத நிலையில் அவர் வாக்களிக்க வந்தார்," என்று ஆணையம் குறிப்பிட்டது.
துமினா அம்பியா, 85, என்பவர் காலை 10.30 மணியளவில் குளுவாங்கில் உள்ள எஸ்ஜேகேசி லிட் டெர்க் நிலையத்தில் இறந்துவிட்டார்.
"அவர் வாக்களிக்க இருந்த வேளையில், அவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். நிலையத்தில் இருந்த சுகாதார அமைச்சு ஊழியர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்தனர்," என்று ஆணையம் கூறியது.
மேற்கூறப்பட்ட இருவரின் மரணங்களை உறுதிசெய்த ஜோகூர் காவல்துறைத் தலைவர் கமாருல் ஸமான் மமாட், பிரேதப் பரிசோதனைக்காக அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

