அஞ்சல் மூலம் வாக்களித்த 35,000 மலேசியர்கள்

1 mins read
341cf4db-9777-4284-9ea1-e622e75dc142
சிலாங்கூரின் சுபாங் ஜெயாவுக்கு வாக்குப்பெட்டி ஒன்று வந்துசேர்கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசிய பொதுத் தேர்தலில் அஞ்சல் வாக்குகள் மூலம் சுமார் 35,000 பேர் வாக்களித்துள்ளனர்.

'வோட்மலேசியா' என்ற அமைப்பின் மூலம் மலேசியாவில் பொதுத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பலனாக வெளிநாடுகளில் உள்ள மலேசிய குடிமக்களில் 35,092 பேர் இப்பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

வாக்குச்சீட்டுகள் அனைத்தும் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, நாடு முழுவதும் உள்ள சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த தொகுதிகளுக்கு உரிய வாக்குச்சீட்டுகள் அடையாளம் காணப்பட்டு, 216 தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும் மொத்தம் 25 நாடுகளில் இருந்து வாக்குச்சீட்டுகள் மலேசியாவுக்கு வந்துசேர்ந்தன என்றும் 'வோட்மலேசியா' தெரிவித்தது.

கடந்த பொதுத் தேர்தலின்போது 7,979 பேர் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினர். தற்போது இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் 'வோட்மலேசியா' தெரிவித்தது.

இம்முறை 48,109 பேர் அஞ்சல்வழி வாக்களிக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்ததாகவும் அந்த அமைப்பு கூறியது.

"தேர்தலில் பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதில் 'வோட்மலேசியா' உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. எங்களால் இயன்ற அளவில் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தச் செய்வோம்," என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.