வெற்றிக்குப் போராடும் அன்வார் இப்ராகிம்

வெற்றிக்குப் போராடும் அன்வார் இப்ராகிம்

2 mins read
444f1af0-c05d-483c-aa74-727251d1b6ae
இம்முறை பேராக் மாநிலத்தில் உள்ள தம்புன் தொகுதியில் களமிறங்கி உள்ளார் அன்வார் இப்ராகிம். படம்: ஏஎஃப்பி -

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார். எனினும் அவருக்கு வெற்றி எளிதில் வாய்க்காது என்பதை வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இம்முறை பேராக் மாநிலத்தில் உள்ள தம்புன் தொகுதியில் களமிறங்கி உள்ளார் அன்வார் இப்ராகிம். அவரை எதிர்த்து பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் ஃபைசல் அசுமு போட்டியிடுகிறார்.

மேலும், தேசிய முன்னணிக் கூட்டணியின் அமினுடின் முகம்மது ஹனஃபியா, பெஜுவாங் கட்சியின் அப்துல் ரஹிம் தாஹிர் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் அன்வாருக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அவர் அஹ்மட் ஃபைசல் அசுமுவைவிட சுமார் 1,700 வாக்குகள் பின்தங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கவலை அடைந்தனர்.

எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார் அன்வார். ஒருவேளை அவர் தோல்வி கண்டால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு அது பேரிடியாக இருக்கக்கூடும்.

இந்நிலையில் இன்று இரவு 9.50 மணி நிலவரப்படி தம்புன் தொகுதியில் நிலைமை மாறி உள்ளது. அ|ங்கு திரு அன்வார் முன்னிலை வகிக்கத் தொடங்கி உள்ளார்.

அவர் தற்போது 8,254 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அஹ்மட் ஃபைசல் அசுமு 8,009 வாக்குகள் பெற்றுள்ளார். மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் அன்வார் முந்தி உள்ளார் என்றபோதிலும், அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பதிவான வாக்குகள் அடங்கிய 280 வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட வேண்டும். இதுவரை 55 பெட்டிகள் மட்டுமே எண்ணி முடிக்கப்பட்டுள்ளன.