செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1adee208-f4e2-45e6-b475-6e6ebcd876f1
-

சமூக ஊடகத்தில் மீண்டும் டிரம்ப்: எலோன் மஸ்க் வாக்கெடுப்பு

சான் ஃப்ரான்சிஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்பை மீண்டும் சமூக ஊடகங்களில் அனுமதிக்கலாமா என்று யோசனை கோரி டுவிட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்துகிறார் அதன் உரிமையாளர் மஸ்க்.

டுவிட்டர் எலோன் மஸ்கின் கையில் சென்றதுமே டிரம்ப் மீண்டும் டுவிட்டரில் அனுமதிக்கப்படுவார் என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை டுவிட்டரில் மஸ்க் ஒரு வாக்கெடுப்பை பகிர்ந்தார். அதில் டிரம்ப்பை மீண்டும் சமூக ஊடகங்களில் அனுமதிக்கலாமா என்று கேட்கப்பட்டிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ள நிலையில் 60 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் டிரம்ப்பிற்கு ஆதரவாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் டிரம்ப் மீதான டுவிட்டர் தடை நீங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் மார்க் ஸக்கர்பெர்கின் மெட்டா நிறுவனம் டிரம்ப் மீதான ஃபேஸ்புக் தடை நீக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாநாடு; ஐரோப்பிய ஒன்றியம் வெளியேறத் தயார்

ரோம்: புவி வெப்பமடைதலை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தும் இலக்கை நீடிக்க செய்வதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், ஐரோப்பிய ஒன்றியம் வெளியேறுவதற்குத் தயாராக உள்ளதாக அதன் பருவநிலை தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ் கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐநாவின் 27வது அனைத்துலக பருவநிலை மாநாடு எகிப்து நாட்டின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உலக நாடுகளின் தலைவா்களும் பல்வேறு அரசுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

தைவானுக்கு சீனா பரிசளித்த பாண்டா உயிரிழந்தது

தைப்பே: தைவானுடனான உறவுக்கு அடையாளமாக 2008ல் சீனா பரிசளித்த பாண்டா நேற்று உயிரிழந்துவிட்டதாக தைப்பே மிருகக்காட்சிச் சாலை நிர்வாகம் சொன்னது.

டுவான் டுவான் எனும் அந்த ஆண் பாண்டாவிற்கு வயது 18. சென்ற ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக நோய்வாய்ப்பட்ட பாண்டா வலிப்புநோய்க்கு ஆளானது.

அதற்கு மூளை புற்றுநோய் இருக்கலாம் என்று மிருகக்காட்சி சாலை நிர்வாகம் சந்தேகப்பட்டது. அதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையால் எந்தப் பலனும் ஏற்படாத நிலையில், டுவான் டுவான் நேற்று உயிரிழந்தது.

உக்ரேனில் ஸெலன்ஸ்கியைச் சந்தித்த பிரிட்டி‌ஷ் பிரதமர் சுனக்

கியவ்: பிரிட்டனின் புதிய பிரதமர் ரி‌ஷி சுனக் நேற்று உக்ரேன் சென்றார்.

உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியை நேரில் சந்தித்து ர‌ஷ்யாவுக்கு எதிரான போரில் பிரிட்டனின் தொடர் ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கில், சுனக் அங்கு சென்றுள்ளதாக பிரிட்டி‌ஷ் செய்தித் தொடர்பாளர் சொன்னதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு, உலகப் பாதுகாப்பு குறித்த மிக முக்கிய பிரச்சினைகளைப் பற்றி சுனக்குடன் பேசியதாக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.