தெஹ்ரான்: ஈரானின் முன்னாள் சமயத் தலைவர் அயதொல்லா ருஹல்லா கொமேனி வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி மாஷா அமினி என்ற 22 வயது பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டிய சிறப்புப் படையினர் அவரைக் கைது செய்தனர்.
காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா அமினி அதே மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணம் ஈரானில் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் போராட்டங்களில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள கொமேனியின் பரம்பரை வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துவிட்டு ஆர்ப்பரிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. சில காணொளிகள் வியாழக்கிழமை எடுக்கப்பட்டதாக கூறுகின்றன.
ஆனால், உள்ளூர் அதிகாரிகள் தீ வைப்பு சம்பவத்தை மறுத்து வருகின்றனர்.

