பேங்காக்: சீன அதிபர் ஸி ஸின்பிங் பப்புவா நியூ கினிவில் ராணுவத் தளம் அமைப்பது குறித்து தம்மிடம் ஒருபோதும் பேசியதில்லை என்று பப்புவா நியூ கினிவின் பிரதமர் கூறிஉள்ளார்.
பேங்காக்கில் வெள்ளிக்கிழமையன்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பப்புவா நியூ கினியின் பிரதமர் ஜேம்ஸ் மரப்பேவும் 20 நிமிட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அங்கு புளும்பர்க் செய்தியாளர்களிடம் பேசிய ஜேம்ஸ் மரப்பே, தாங்கள் இருவரும் வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக சொன்னார்.
"நாங்கள் ராணுவ ரீதியாக எதுவும் பேசவில்லை. உதவி, மானியங்கள் குறித்தும் எதுவும் பேசவில்லை," என்றார் அவர்.
பசிபிக் வட்டாரத்தில் தனது பங்களிப்பை வலுப்படுத்த சீனா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாக பப்புவா நியூ கினிவின் நட்பு நாடான அமெரிக்கா கவலையடைந்துள்ளது.
பேங்காக்கில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் தொடர் முயற்சிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
அப்போது, "இருநாடுகளுக்கும் இடையிலான போட்டியைப் பொறுப்புடன் நிர்வகிப்பதற்கு நாம் வெளிப்படையான தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும்," என்ற அமெரிக்க அதிபர் பைடனின் செய்தியை சீன அதிபர் ஸியிடம் ஹாரிஸ் வலியுறுத்தியதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
சீன-அமெரிக்க உறவு மீண்டும் ஆரோக்கியமானதாகவும் நிலையானதாகவும் மாற இருதரப்பும் பாடுபடும் என்று தாம் நம்புவதாக ஸி கூறியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
பலதரப்பு வர்த்தக அமைப்பை வலுப்படுத்தவும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தொடரவும் விதிமுறைகளை வலுப்படுத்த எபெக் மாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

