டுவிட்டர் சமூகத் தளத்திலிருந்து பலர் வெளியேற தொடங்கியுள்ளர். "RIPTwitter" எனும் ஹேஷ்டேக் பிரபலமாகிவருகிறது.
தாங்கள் பதிவுசெய்த தகவல்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றை மற்ற தளங்களுக்கு மாற்றிவிட பயனீட்டாளர்கள் பலர் முயன்றுவருகின்றனர். டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர் அணியில் பாதி பேரை எலோன் மாஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார். ஊழியர்கள் பலரும் தங்கள் சொந்த விருப்பத்தில் வேலையைவிட்டு விலகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை விலகப்பட்டுள்ளது. இந்த முடிவை டுவிட்டரைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் ஆதரிப்பதாக மாஸ்க் குறிப்பிட்டார். ஆனால் திரு டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த விரும்புவதாகத் தெரியவில்லை.
சென்றாண்டு அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் திரண்டு வன்முறையில் ஈடுபட்டதையடுத்து திரு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. 2024ல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக திரு டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.


