மலேசியப் பிரதமர் பதவி: அன்வாரை முந்துகிறார் முகைதீன்

மலேசியப் பிரதமர் பதவி: அன்வாரை முந்துகிறார் முகைதீன்

2 mins read
3d0e8124-492a-44cc-a7d6-cbc5ba3bd8d5
-
Google News Preferred Icon

மலேசியாவில் நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதை அடுத்து கூட்டணி அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பொறுப்பை ஏற்க அன்வார் இப்ராஹிம்-முகைதீன் யாசின் இருவருக்கும் இடையில் நீயா-நானா போட்டி படுவேகம் எடுத்தது.

பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்), பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்), பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆகிய மூன்று கூட்டணிகள் களம் கண்டன.

அன்வார் தலைமையிலான பிஎச் அணிக்கு மொத்தம் 82 இடங்கள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பிஎன் அணியில் பிஎன் 73 இடங்களில் வென்றது. அதோடு சேர்ந்து களம் கண்ட கபுங்கான் ரக்யாட் சாபா, கிழக்கு மாநிலத்தில் ஆறு இடங்களைப் பிடித்தது.

அன்வார் அணிக்குப் பலம் அதிகம் இருந்தாலும் நீயா நானா போட்டியில் முகைதீன் யாசின் கை ஓங்குவதாகவே தெரியவந்தது.

சராவாக் மாநிலத்தில் உள்ள 31 இடங்களில் 22 இடங்களைப் பிடித்துள்ள ஜிபிஎஸ் என்ற கட்சியின் தலைவரும் அந்த மாநில முதல்வருமான அபாங் ஜொஹாரி முகைதீனைச் சந்தித்துள்ளார்.

அதோடு, நாடாளுமன்றத்தில் ஆகப் பெரிய தனிக் கட்சியாகத் திகழும் பார்ட்டி இஸ்லாம் சிமலேசியா தலைவர் ஹாடி அவாங்கையும் அவர் சந்தித்தார். அவர் கள் மத்திய அரசை அமைப்பது பற்றி விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தனது அணியிலேயே பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார், 222 பேரைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் தன் அணியே அதிக இடங்களைப் பிடித்து இருப்பதால் பிரதமர் பதவியை ஏற்க தன் அணிக்கே வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்.