Ku Li எனப்படும் ரசாலி ஹம்ஸா தாம் இதுவரை தக்கவைத்து வந்த குவா முசாங் தொகுதியை இழந்துள்ளார். மலேசியாவில் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் ரசாலி.
மலேசியாவின் 15வது பொதுத்தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வெளிவந்த நிலையில், திரு ரசாலி தோல்வி கண்டார் என்ற செய்தியும் வெளியானது.
கடந்த 1974ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்தார் ரசாலி. இந்த நீண்ட பயணத்தில் 1986 முதல் அவர் குவா மூசாங் தொகுதியில் பலமுறை வெற்றியைப் பதிவுசெய்து, அத்தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்து வந்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 163 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டது. பாஸ் கட்சி வேட்பாளர் அவரை வீழ்த்தி உள்ளார்.
இத்தேர்தலில் பாஸ் கட்சியும் தேசிய முன்னணிக் கூட்டணியும் சுமார் 21,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றன. பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் 4,517 வாக்குகள் பெற்றுள்ளார். பக்கத்தான் பெற்ற வாக்குகளும்கூட திரு ரசாலியின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.


