தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் எம்.சரவணன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும் வழக்கறிஞருமான சரஸ்வதி சுமார் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
எம்.சரவணன் 16,693 வாக்குகள் பெற்றதாகவும் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் சரஸ்வதி 10,992 வாக்குகள் பெற்றுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேசிய முன்னணிக் கூட்டணி வேட்பாளர் ஹாஜி முஹம்மத் யட்சான் 10,669 வாக்குகள் பெற்றுள்ளார்.
15வது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதுமே தாப்பார் தொகுதியில் எம்.சரவணனை எதிர்த்து போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் மஇகா சார்பில் கூட்டரசு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே அமைச்சர் சரவணன்தான். எனவே அவருக்கு எதிராக பலம் பொருந்திய வேட்பாளரை பிகேஆர் களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கேற்ப அண்மையில் வழக்கறிஞர் சரஸ்வதி, பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது எம்.சரவணனை எதிர்த்து களமிறங்கப்போவது சரஸ்வதிதான் என்று பேசப்பட்டது.
தாப்பா தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதாகக் குறிப்பிட்டு, அவற்றைப் பட்டியலிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்தார் சரவணன். மேலும், சிறப்பு காணொளிப் பதிவுகளை வெளியிட்டும் வாக்காளர்களை நேரில் சந்தித்தும் அவர் வாக்கு சேகரித்து வந்தார்.

