பாகாங்கில் ஆட்சி அமைப்பதில் குழப்பநிலை

பாகாங்கில் ஆட்சி அமைப்பதில் குழப்பநிலை

2 mins read
f718eef2-3a25-4b4c-ae76-50743a95633e
-

குவாந்­தான்: பாகாங்­கில் எந்­தக் கூட்­ட­ணிக்­கும் அறு­திப் பெரும்­பான்மை கிடைக்­கா­த­தால் அங்கு ஆட்சி அமைப்­பது தொடர்­பில் குழப்­பம் நில­வு­கிறது.

பாகாங்­கில் பெரிக்­கத்­தான் நேஷ­னல் 17 இடங்­க­ளை­யும் தேசிய முன்­னணி 16 இடங்­க­ளை­யும் பக்­கத்­தான் ஹரப்­பான் எட்டு இடங்­களை­யும் கைப்­பற்­றி­யுள்­ளன.

இவற்­றில் இரண்டு கூட்­ட­ணி­கள் இணைந்­தால்­தான் அங்கு ஆட்சி அமைக்க இய­லும்.

பெரிக்­கத்­தான் நேஷ­ன­லின் தேசி­யத் தலைமை, பக்­கத்­தான் ஹரப்­பா­னு­டன் ஒத்­து­ழைப்பு என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று சொல்­லி­யி­ருப்­ப­தால் அது தேசிய முன்­ன­ணி­யு­டன் கைகோத்து ஆட்சி அமைக்­கக்கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனால் முதல்­வர் பதவி யாருக்கு என்று தெளி­வான தக­வல் இல்லை.

பாஸ் கட்­சித் துணைத் தலை­வர் துவான் இப்­ரா­ஹிம் துவான் மன் முதல்­வர் பத­விக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளார்.

தேசிய முன்­ன­ணி­யின் மாநிலத் தலை­வர் வான் ரோஸ்டி வான் இஸ்­மா­யில் தேர்­த­லில் தங்­கள் கூட்­ட­ணிக்கு வாக்­க­ளித்த வாக்­கா­ளர்­க­ளுக்­கும் கட்­சி­யின் வெற்­றிக்­குச் சேவை­யாற்­றிய தொண்­டர்­க­ளுக்­கும் ஃபேஸ்புக்­கில் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டுள்­ளார்.

இந்­தப் பொதுத் தேர்­த­லில் பாகாங்­கில் பெரிக்­கத்­தான் நேஷ­ன­லின் செல்­வாக்கு அதி­க­ரித்­துள்­ளது என்றே சொல்லவேண்டும்.

செக்கா, கோலா சென்­டுல், புலாவ் தவார், புக்­கிட் இபாம், சுங்­காய் லெம்­பிங், புலாவ் மனிஸ், கோலா செமந்­தான், லஞ்­சாங், ஜெந்­தெ­ராக் ஆகிய இடங்­களில் அது பெரிய அள­வில் வெற்றி பெற்­று இருக்கிறது.

பெரிக்­கத்­தான் வேட்­பா­ளர் யூனுஸ் ரம்லி கால­மா­ன­தைத் தொடர்ந்து டியோ­மான் தொகு­திக்­கான தேர்­தல் அடுத்த மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தத் தேர்­தல் முடிவு சாத­க­மா­க அமைந்தால், தேசிய முன்­னணி, பெரிக்­கத்­தான் நேஷ­ன­லு­டன் சம­நிலை காணும் வாய்ப்பு உள்­ளது.

பாகாங்­கிற்­கான நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பெரிக்­கத்­தா­னின் கை ஓங்­கி­யுள்­ளது. பெரும்புள்ளிகள் சிலரை இதன் வேட்பாளர்கள் வீழ்த்தியுள்ளனர்.

பெர்­லிஸ் மாநில முதல்­வர் இன்று பத­வி­யேற்பு

இவ்­வே­ளை­யில் பெர்­லிஸ் மாநி­லத்­தின் புதிய முதல்­வர் குறித்து இன்று அறி­விக்­கப்­படும் என்று பாஸ் கட்சி தெரி­வித்­துள்­ளது.

பெர்லிசில் பெரிக்­கத்­தான் நேஷ­னல் மாபெரும் வெற்றி அடைந்­துள்­ள ­நி­லை­யில் பெர்­லிஸ் மாநி­லக் கட்­சித் தலை­வர் முக­மது ஷுக்ரி ரம்லி, புதிய முதல்­வர் இன்று பத­வி­யேற்­கக்­கூ­டும் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

கட்­சி­யின் தேசி­யத் தலை­மை­யி­ட­மி­ருந்து இதன் தொடர்­பி­லான நிய­ம­னக் கடி­தத்­திற்­குக் காத்­தி­ருப்­ப­தாக நேற்று அவர் கூறி­னார். கட்­சி­யின் மாநில அலு­வ­ல­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு ஷுக்ரி பேசி­னார்.

நாட்­டின் 15வது பொதுத் தேர்­த­லில் சங்­லாங் தொகு­தி­யைத் தக்­க­வைத்­துக்­கொண்ட அவர், தமக்கு மிகப்­பெ­ரும் வெற்­றியை ஈட்­டித்­தந்த பெர்­லிஸ் வாக்­கா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

பெர்­லிஸ் மாநில சட்­ட­மன்­றத்­துக்­கான 15 இடங்­களில் 14ல் பெரி­க்கத்­தான் நேஷ­னல் கூட்­டணி வாகை சூடி­யுள்­ளது. அவற்­றில் பெரும்­பா­லான இடங்­கள் பாஸ் கட்­சி­யின் வசம் வந்­துள்­ளன. தேசிய முன்­னணி அனைத்து சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் மூன்று நாடா­ளு­மன்­றத் தொகுதி­களி­லும் தோல்­வி­யுற்­றது.