கோலாலம்பூர்: அம்னோ கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரும் அரசியல் உத்தியாளருமான ஹிசாதுல் இஷாம் அப்துல் ஜலீல் (படம்), கட்சித் தகவல் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் அகமது மஸ்லான் உறுதிசெய்தார்.
திரு இஷாம் ஜலீலும் ஃபேஸ்புக்கில் தமது நியமனம் குறித்து தெரிவித்துள்ளார். அண்மைத் தேர்தலில் அவர் ஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
முன்னதாக நேற்றுக் காலை அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் ஷரில் சுஃபியான் ஹம்டான் பதவி விலகினார்.
அண்மைத் தேர்தலில் அலோர் காஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகக் கூறினார்.
தேசிய முன்னணி தோல்விக்குப் பொறுப்பேற்று, தலைவர் அகமது ஸாகிட் பதவி விலகவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபீஸ் காஸியும் ஸாகிட் பதவி விலகவேண்டும் என்று கூறினார்.

