மலேசியப் பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பெரும்புள்ளிகள்
கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பழம்பெரும் அரசியல்வாதிகள் சிலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
சுங்கை புலோ தொகுதியில் கைரி ஜமாலுதீன் தோல்வியுற்றார். இதனால் மலேசியாவின் அடுத்த பிரதமராகும் இவரது கனவு கைநழுவியது. இடைக்கால சுகாதார அமைச்சரான கைரியை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் ரமணன் ராமகிருஷ்ணன் கிட்டத்தட்ட 2,700 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார்.
மலேசியாவின் நீண்டநாள் நாடாளுமன்ற உறுப்பினரான 'கு லி' எனப்படும் ரசாலி ஹம்ஸா தாம் இதுவரை தக்கவைத்து வந்த குவா முசாங் தொகுதியை இழந்துவிட்டார். கடந்த 1974ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்தார் ரசாலி. நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளரைவிட 163 வாக்குகள் குறைவாகப் பெற்று அவர் தோல்வியைத் தழுவினார்.
மலேசிய முன்னாள் பிரதமரான 97 வயது டாக்டர் மகாதீர் முகமது, லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியுற்றதுடன் வைப்புத்தொகையையும் இழந்தார். அவருக்கு 4,566 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இத்தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனலின் முகமது சுஹைமி அப்துல்லா, 25,463 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.
மலேசியாவின் இடைக்கால நிதி அமைச்சராக இருந்த ஸஃப்ருல் அஸிஸ், கோலா சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டியில் ஏறக்குறைய 1,000 வாக்கு வித்தியாசத்தில் அமானா கட்சியின் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமதிடம் தோல்வியுற்றார்.
ஜப்பானியப் பிரதமருக்கு நெருக்குதல்
தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அந்நாட்டு உள்துறை அமைச்சர் மினோரு டெராடாவைப் பதவியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளதாக யோமியுரி நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
பல்வேறு நிதி ஊழல்களில் தொடர்பிருப்பதாகத் திரு டெராடாமீது குறைகூறல்கள் எழுந்துள்ள நிலையில், அவரைப் பதவியிலிருந்து விலக்கும்படி ஆளுங்கட்சியினர் பிரதமருக்கு நெருக்குதல் தருவதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் டெராடா பதவியிலிருந்து நீக்கப்பட்டால், ஒரு மாதத்திற்குள் ஜப்பானிய அமைச்சரவையிலிருந்து வெளியேறும் மூன்றாவது அமைச்சராக அவர் விளங்குவார்.
சிரியா, ஈராக்மீது துருக்கி தாக்குதல்
இஸ்தான்புல்: சிரியாவின் வடக்குப் பகுதியிலும் ஈராக்கிலும் உள்ள குர்தியப் படைத்தளங்கள்மீது நேற்று ஆகாயத் தாக்குதல் மேற்கொண்டதாகத் துருக்கி அறிவித்துள்ளது.
துருக்கிமீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட தளங்கள் அவை என்று அங்காரா கூறியது. 'பிகேகே' எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, அதன் விரிவாக்கமாகத் துருக்கி கருதும் 'ஒய்பிஜி' எனப்படும் குர்திய மக்கள் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றின் தளங்களைக் குறிவைத்து இந்த ஆகாயத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் துருக்கி கூறியது.
ஐக்கிய நாட்டு சாசனத்தின் 51ஆம் பிரிவின்கீழ் தற்காப்பு உரிமை என வகுக்கப்பட்டதற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகத் துருக்கியத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
சென்ற வாரம் இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் அறுவர் உயிரிழந்தனர். மேலும் 81 பேர் காயமுற்றனர். இந்தத் தாக்குதலுக்கு 'பிகேகே'தான் காரணம் என்று துருக்கி குறைகூறுகிறது. ஆனால் 'பிகேகே', 'ஒய்பிஜி' இரண்டுமே தங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று நிராகரித்துள்ளன.

