நான்கு கண்டங்கள், 30,000 கி.மீ. பயணம்: சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவுக்கு உணவு விநியோகம் செய்த சென்னை பெண்

நான்கு கண்டங்கள், 30,000 கி.மீ. பயணம்: சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவுக்கு உணவு விநியோகம் செய்த சென்னை பெண்

1 mins read
954e17da-caed-4b23-bdee-036f2facd04a
மானசாவின் இந்தப் பயணம், உணவு விநியோகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட உலகின் மிக நீண்ட பயணம் ஆகும். காணொளிப் படம் -

சென்னையைச் சேர்ந்த மானசா கோபால் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவில் உள்ள வாடிக்கையாளருக்கு உணவு விநியோகச் சேவை செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

நான்கு கண்டங்கள், 30,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து இவர் உணவு விநியோகம் செய்துள்ளார். இது, உணவு விநியோகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட உலகின் மிக நீண்ட பயணம் ஆகும். தன்னுடைய பயணத்தை காணொளியாக இவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கையில் உணவுப் பையுடன் சிங்கப்பூரிலிருந்து தன் பயணத்தைத் தொடங்குகிறார் மானசா. விமானம் மூலமாக ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகருக்குச் செல்கிறார். அங்கிருந்து அர்ஜெண்டினத் தலைநகர் பியூனஸ் அய்ரெசுக்குச் செல்கிறார். பிறகு அங்கிருந்து உசுவையா நகருக்குச் செல்கிறார். இறுதியாக, அங்கிருந்து அண்டார்டிகாவுக்கு விமானத்தில் புறப்படுகிறார். பனிமலையின் மீது நடந்து இறுதியில் வாடிக்கையாளரின் முகவரிக்கு சென்றுசேரும் மானசா, உணவுப் பையை அவரிடம் ஒப்படைக்கிறார்.

சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படித்த மானசா, உலக நாடுகளுக்குப் பயணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்டார்டிகாவுக்கு செல்ல விரும்புவதாகவும் அதற்கு நிதி திரட்டிக் கொண்டிருப்பதாகவும் சென்ற ஆண்டு அவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில், ஃபுட் பாண்டா என்ற உணவு விநியோக நிறுவனம் அவருக்கு அண்டார்டிகாவுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.