அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை தமது 80வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அமெரிக்க வரலாற்றிலேயே 80 வயதைத் தொட்ட முதல் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
தம்முடைய மனைவி ஜில் ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசரிப்புடன் பிறந்தநாளைக் கொண்டாடினார் திரு பைடன். அதுவும், வெள்ளை மாளிகையில் சனிக்கிழமை நடந்தேறிய தம்முடைய பேத்தியின் திருமணத்தால் திரு பைடனுக்கு கொண்டாட்ட உணர்வு இரட்டிப்பானது.
அமெரிக்காவின் ஆக வயதான அதிபரான திரு பைடன், அடுத்த முறை தேர்தலில் போட்டியிடுவது குறித்த திட்டங்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருப்பதாக முன்னதாகக் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் மருத்துவ வசதிகள் மேம்பட்டுள்ளதன் காரணமாக அரசியல் தலைவர்களின் ஆயுட்காலம் கூடியுள்ளது மட்டுமல்லாமல் தங்களுடைய பெற்றோர் இருந்ததைவிட சமுதாயத்தில் நீண்டநாள் உற்பத்தித்திறனுடன் செயல்படுகின்றனர். எனவே 80 தான் புதிய 70 என்று சிலர் கூறுகின்றனர்.
இதற்கிடையே, மலேசிய முன்னாள் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகம்மதும் 97 வயதில் அரசியல் களத்தில் நின்றார். அண்மையில் நடந்து முடிந்த மலேசியப் பொதுத் தேர்தலில் லங்காவி தொகுதியைத் தக்கவைக்க அவர் தவறினார்.

