கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலக் கிழக்குக் கடற்கரையோரத் தொகுதிகளான செம்போர்னா, லகாட் டட்டு இரண்டிலும் சகோதரர்கள் இருவர் வெற்றிபெற்றுள்ளனர். வாரிசான் கட்சித் தலைவர் ஷஃபி அப்டால், அவரது சகோதரர் யூசோஃப் அப்டால் இருவரும் முறையே அந்தத் தொகுதிகளில் வாகை சூடியுள்ளனர்.
ஷஃபி அப்டால் 20,810 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 'ஜிஆர்எஸ்' கட்சியின் நிக்சன் அப்துல் ஹபி 7,892 வாக்குகளும் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் அரச்டம் பாண்டோராக் 1,848 வாக்குகளும் பெற்றனர். அந்தத் தொகுதியில் 48 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின.
யூசோஃப் அப்டால் 4,376 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணியின் மைசாடுல் அக்மாம் அலாவி. ஜனநாயக செயல் கட்சியின் சியா யு ஹாக் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
இவ்வேளையில், சாபாவின் வடக்குப் பகுதியில், 'பிகேடிஎம்' கட்சியின் துணைத் தலைவர் வெட்ரோம் பகாண்டா கோத்தா மருது தொகுதியிலும் அவரது தம்பியும் சுயேச்சை வேட்பாளருமான வெர்டோன் பகாண்டா குடாட் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அண்ணன் வெட்ரோம் 8,174 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்ற நிலையில், தம்பி வெர்டோன் 1,967 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிக் கனியைச் சுவைத்துள்ளார்.

