கோலாலம்பூர்: மலேசியாவில் அரசியல் பரமவைரிகளான பக்கத்தான் ஹரப்பானும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியும் பேராக், பாஹாங் மாநிலத்தில் ஆட்சியமைக்க கைகோர்த்துள்ளன.
இந்த, இரு தரப்புகளுக்கான புதிய கூட்டணி மலேசிய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.
பிரதமர் வேட்பாளரான அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான், இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவை வழங்கியுள்ளது.
இரு மாநிலங்களிலும் தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகவும் அது ஆதரவு தெரிவித்துள்ளது. இது, இரு மாநிலங்களிலும் நிலவிய முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு இரு மாநிலத்திலும் யாரும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறவில்லை.
இந்த நிலையில் அம்னோவைச் சேர்ந்த சாரணி முகமட் நேற்று மாலை பேராக் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
பேராக்கில் 59 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. தேசிய முன்னணி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பக்கத்தான் ஹரப்பான் 24 இடங்களில் வெற்றி பெற்றது. இரு தரப்பும் கூட்டு சேர்ந்துள்ளதால் மொத்தம் 33 இடங்களுடன் அவை முன்னிலை வகிக்கும்.
பேராக்கில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 30 இடங்கள் தேவை. அதற்கும் மேலாக இருப்பதால் பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணிக்கு ஆட்சி அமைப்பதில் பிரச்சினையில்லை.
பாஹாங்கில் தேசிய முன்னணி (பிஎன்) 16 இடங்களிலும் பக்கத்தான் ஹரப்பான் எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு கூட்டணிகளின் மொத்த இடங்கள் 24ஆக இருப்பதால் பெரும்பான்மைக்குத் தேவையான 22க்கு மேல் உள்ளது. இம்மாநிலத்தின் மொத்த சட்டமன்ற இடங்கள் 42.
முன்னைய பிரதமரான முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் பேராக்கில் 26 இடங்களிலும் பாஹாங்கில் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இரு மாநிலங்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்க முடியாமல் எதிர்க்கட்சியாகி உள்ளது.
பாஹாங்கில் பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி கூட்டணி பற்றி நேற்று மாலை வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இரு மாநிலங்களிலும் பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ள புதிய உறவு, தேசிய அளவிலும் எதிரொலிக்கலாம் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

