மணிலா: சீனாவின் ஆதிக்கத்தைத் தக்க வழியில் எதிர்கொள்ளவும் பிலிப்பீன்சுடன் முறிந்துபோன உறவைப் புதுப்பிக்கவும் அமெரிக்கதுணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே நீண்ட, நீடித்த உறவு நிலவுகிறது என்றார்.
கடந்த ஜூன் மாதம் ஃபெர் டினண்ட் மார்கோஸ் ஜூனியர் அதிபர் பொறுப்பை ஏற்ற பிறகு பிலிப்பீன்சுக்கு அமெரிக்க உயர்மட்ட தலைவர் வருவது இதுவே முதல் முறை.
முந்தைய அதிபர் டுட்டர்டேயின் பதவிக் காலத்தில் இரண்டு ஆண்டு களாக அமெரிக்க-பிலிப்பீன்ஸ் உறவு மோசமடைந்தது.
பிலிப்பீன்சின் துணை அதிபரும் டுட்டர்டேயின் மகளுமான சாரா டுட்டர்டேயையும் அவர் சந்தித்துப் பேசினார்.
திரு டுட்டர்டேயின் ஆட்சியில் போதைப் பொருளுக்கு எதிரான போர் எனக் கூறி ஆயிரக்கணக்கானவர்கள் வழக்கு விசாரணையின்றி கொல்லப்பட்டனர்.
மனித உரிமைகளுக்கு எதிரான இச்செயல்கள் விசாரிக்கப்பட வேண்டும் என உலகளாவிய அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த அப்போதைய அதிபர் டுட்டர்டே அமெரிக்காவுக்கு எதிராக சீனாவின் பக்கம் சாய்ந்தார்.
இந்த நிலையில் "தென்சீனக் கடல் விவகாரத்தில் அனைத்துலக விதிகள், விதிமுறைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம்," என்று மணிலாவில் உள்ள அதிபர் மாளிகையில் பேச்சுவார்த்தை தொடங்கு வதற்கு முன்பு திரு மார்கோசிடம் திருமதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
"தென் சீனக் கடலில் பிலிப்பீன்ஸ் ஆயுதப் படைகள், பொதுக் கலன்கள் அல்லது விமானங்கள் தாக்கப்பட்டால் பிலிப்பீன்ஸ் மீதான அமெரிக்காவின் கடப்பாடு வெளிப்படும். இது, பிலிப்பீன்ஸ் மீதான எங்களின் அசைக்க முடியாத கடப்பாடு," என்றார் அவர்.
பிலிப்பீன்ஸ் மற்றும் மார்கோஸ் குடும்பத்துடன் அமெரிக்கா நீண்ட மற்றும் சிக்கலான உறவைக் கொண்டிருந்தது.
தற்போதைய அதிபர் மார்கோஸின் சர்வாதிகாரியான அவரது தந்தை, வாஷிங்டனின் ஆதரவுடன் பிலிப்பீன்சில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

