கோலாலம்பூர்: அண்மைய மலேசிய பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டியை ரசித்து வருகிறார்.
"எனது பாதை முடிந்துவிடவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நேரமிது, அதுவரை தொலைக்காட்சியில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காண ஆவலுடன் இருக்கிறேன்," என்று சுங்கை புலோ தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டி யிட்ட கைரி குறிப்பிட்டார்.
பதினான்கு நாள் கடுமையான தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு அவர் ஓய்வெடுத்து வருகிறார்.
"உண்மையில் சோர்வடைந்துவிட்டேன். தொற்றுநோயை நிர்வகிக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டபிறகு எனக்கு ஓய்வே இல்லை. கொவிட்-19 தொற்றில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இரண்டு ஆண்டுகள் சிரமமாக இருந்தது. ஆனால் இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டுக்கு சேவையாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன். பல நாடுகளைப்போல நமது நாடும் மீண்டு வந்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
2020 முதல் சுகாதார மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சராகப் பொறுப்பு வகித்த திரு கைரி, கொவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றினார்.
15வது பொதுத் தேர்தலில் சுங்கை புலோவில் கடுமையான ஏழு முனைப் போட்டி நிலவியது. பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளரான ரமணன் ராமகிருஷ்ணனிடம் சுமார் 2,693 வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.
தேர்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், அரசியல்வாதியாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பகிரங்கமாகப் பரிசீலிக்கப் படுவது வேதனையாக இருக்கிறது, என்றார்.