செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
dcf23efe-9c14-4473-9ffd-a9e4c609e55f
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஐவருக்கு ஏராள மானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். படம்: ஏஎஃப்பி -

மலேசிய பங்குகள் வீழ்ச்சி

கோலாலம்பூர்: மலேசியாவில் நிலையான அரசாங்கம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பங்குகளும்

நாணயத்தின் மதிப்பும் வீழ்ச்சிகண்டன. பெரும்பான்மைப் பலத்தைக் காட்ட கூட்டணிகளுக்கு மாமன்னர் நேற்று மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்கினார். இதையடுத்து சரிவிலிருந்து பங்குகள் மீட்சியடைந்தன.

பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் கோலாலம்பூர் குறியீடு 1.5 விழுக்காடு சரிவைச் சந்தித்தது. பிற்பகலில் இது சற்று மீட்சியடைந்தது. ரிங்கிட்டின் மதிப்பு நான்கு மாதங்களில் இல்லாத அளவு 0.8 விழுக்காடு குறைந்து ஓர் அமெரிக்க டாலருக்கு 4.5872 என பரிவர்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பாதியளவு நாணயத்தின் மதிப்பு மீண்டது. மீட்சிக்குப் பிறகு ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 3.342 என ரிங்கிட் பரிவர்த்தனை செய்யப்பட்டது.

கதாநாயகர்களாக மாறிய

வாடிக்கையாளர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள ஓரினக் காதலர்களுக்கான கேளிக்கை விடுதியில் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டவனை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து மோசமான துப்பாக்கிச் சூட்டை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பல பேர் காப்பாற்றப்பட்டனர்.

கொலராடோ ஸ்பிரிங்ஸ் மேயர் ஜான் சதர்ஸ், கேளிக்கை விடுதியில் இருந்த ஒருவர், துப்பாக்கிக் காரனின் சொந்த துப்பாக்கியைப் பறித்து தாக்கியதாகத் தெரிவித்தார். மற்றொருவர், துப்பாக்கிக்காரனை காவல்துறையினர் வரும் வரை தரையில் கிடத்திப் பிடித்துக்கொண்டார்.

சனிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில் கதாநாயகர்களைப்போல செயல்பட்டவர்களை மேயர் பாராட்டியிருக்கிறார். அப்படியும் துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 25 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பில் 22 வயது ஆண்டர்சன் லீ அல்ரிச் என்ற சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

பெய்ஜிங்கில் தொற்றுக்கு

இருவர் மரணம்

பெய்ஜிங்: பெய்ஜிங்கில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் நேற்று மாண்டனர். இருவரும் வயதானவர்கள், பெய்ஜிங் குடியிருப்பாளர்கள் என்று சீனா தெரிவித்தது.

இரண்டு மரண தண்டனை

கைதிகள் தப்பினர்

டாக்கா: பங்ளாதேஷில் அமெரிக்க வலைப்பதிவாளரை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு போராளிகள் டாக்கா நீதிமன்றத்திலிருந்து தப்பி விட்டனர். கடந்த 2015 பிப்ரவரியில் பங்ளாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளரான அவிஜித் ராய் மனைவியுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது போராளிகள் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இந்தத் தாக்குதலில் வலைப்பதிவாளரான அவரது மனைவி ரஃபிடா போன்யா அஹமட்டுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கட்டைவிரல் துண்டானது. இந்த வழக்கில் போராளிகள் குழுவைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் பைக்கில் வந்தவர்கள் ரசாயனப் பொருளை காவல்துறையினர் மீது வீசி மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரை அழைத்துச் சென்றுவிட்டனர்.

ஜோகூர் ஆறுகளின் நீர்மட்டம்

எச்சரிக்கை அளவைத் தாண்டியது

ஜோகூர்: ஜோகூரில் உள்ள இரண்டு ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது என்று நீர்ப்பாசன, வடிகால் வாரியத்தின் இணையப்பக்கம் நேற்று காலை 9.15 மணி நிலவரப்படி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பூலோ கசாப்பில் உள்ள சுங்கை மூவார் ஆற்றின் நீர்மட்டம் வழக்கமான 8.53 மீட்டரைத் தாண்டி 8.75 மீட்டருக்கு நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இது, 0.22 மீட்டர் கூடுதலாகும். இதேபோல கம்போங் அவாட் செகாமட்டில் உள்ள சுங்கை மூவாரின் நீர்மட்டம் 0.32 மீட்டர் அதிகரித்து 19,67 மீட்டரை எட்டியது. பல ஆறுகள், அணைக்கட்டுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.