சியாஞ்சுர்: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது.
சாலைப்போக்குவரத்து துண்டிப்பு, மின்சாரத் தடை போன்ற காரணங்களால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிர்பிழைத்தவர்களை சம்பவ இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சியாஞ்சுர் பகுதியில் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்து போக்குவரத்து முடங்கிப்போயுள்ளது. அத்துடன் சில பகுதிகளுக்கு மின்சாரம் தடைபட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக மீட்புப்பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களின் உதவியுடன் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இடிபாடுகளில் குறைந்தது 25 பேர் சிக்கியிருக்கலாம் என்று இந்தோனீசியாவின் தேசிய பேரிடர் துடைப்பு முகவை தெரிவித்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் 2,000க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்த முகவை தெரிவித்துள்ளது. இதுவரை 13,000க்கு மேற்பட்டோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஜாவா ஆளுநர் ரிட்வான் காமில் தெரிவித்துள்ளார்.
மாண்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த மாணவர்கள் சிலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
நூற்றுக்கணக்கானோர் கட்டட இடிபாடுகளுக்குள்ளும் நிலச்சரிவிலும் சிக்கி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையின் கார் நிறுத்தும் இடங்களிலும் தற்காலிக அவசர சிகிச்சைக் கூடாரங்களிலும் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களைத் தூக்கிக்கொண்டு அவசர மருத்துவ வாகனம் வந்த வண்ணம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சியாஞ்சுர் நகரின் பல பகுதிகளில் மக்கள், அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் வெட்டவெளியில் தங்கிவருகின்றனர்.
இடிந்துவிழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை ரிக்டர் அளவில் 5.6 என பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமுற்றதுடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தா வரை நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.
கடந்த 2021 ஜனவரி மாதம் இந்தோனீசியாவில் சுலாவேசி தீவில் 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.

