சீனாவில் தொற்று அதிகரிப்பு
பெய்ஜிங்: சீனாவில் நாளுக்கு நாள், கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே அந்நாடு நாடளாவிய முறையில் தொற்று சோதனையை முடுக்கிவிட்டுள்ளது.
தொற்றுப் பரவலைத் தொடர்ந்து தலைநகர் பெய்ஜிங்கில் பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடுமிடங்களை மூடுவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தினசரி தொற்று திங்கள்கிழமை நிலவரப்படி 28,127 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரலில் பதிவான உச்சக்கட்ட தொற்றுப்பதிவுக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், அரசாங்கக் கட்டடங்கள் ஆகியவற்றில் நுழைவதற்கு கடந்த 48 மணி நேரம் தொற்றுப் பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழைக் காண்பிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் தினசரி தொற்று அதிகரிப்பதால், சீனாவின் மற்ற பகுதிகளில் இருந்து அந்நகருக்குள் நுழைபவர்களுக்குக் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அவர்கள் மூன்று நாள்களுக்கு கொவிட்-19 சோதனை மேற்கொள்ளவேண்டும்.
எகிப்தில் $15 பில்லியன் காற்றாலைத் திட்டம்
கெய்ரோ: உலகிலேயே மிகப்பெரிய காற்றாலைப் பண்ணை எகிப்தில் கட்டப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஐரோப்பியா, சவூதி அரேபியா நாடுகளுக்கு மின்சாரம் வழங்கமுடியும். இதற்கான கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனங்களில் ஒன்றான 'இன்ஃபனிட்டி பவர்' S$15 பில்லியன் முதலீடு செய்யவிருக்கிறது. இந்தக் கட்டுமானத் திட்டத்திற்காக எகிப்தின் மேற்குப் பாலைவனப் பகுதியில் இரண்டு இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததும் இதன் மூலம் 10 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று 'இன்ஃபனிட்டி பவர்' என்னும் அந்நிறுவனத்தின் தலைவர் முகமது மன்சூர் கூறியுள்ளார்.

