சோல்: ஐந்து மாதங்களுக்கு முன்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு நாட்டை முடக்கிய கனரக வாகன உரிமையாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் தென்கொரிய அரசும் அரசு அதிகாரிகளும் அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சம்பளம், உயர்ந்து வரும் எண்ணெய் விலை போன்றவற்றை முன்வைத்து நாளை கனரக வாகனங்களை பிரதிநிதிக்கும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளன.
இதை தடுக்கும் பெரு முயற்சியில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் தமது மக்கள் சக்தி கட்சி அதிகாரிகளை சந்தித்து பிரச்சினைக்குத் தீர்வுகாணும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் எட்டு நாள்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கனரக வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் பகுதி மின்கடத்தி, வாகனம் போன்ற துறைகளுக்குத் தேவையான பொருள்களை தாமதப்படுத்தின. இதனால், உற்பத்தி இழப்பு, குறித்த நேரத்தில் உற்பத்திப் பொருள்களை விநியோகிக்க முடியாமல் போனதில் தென்கொரியாவுக்கு S$1.6 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை நாட்டுப் பொருளியலுக்கு இந்த சங்கங்கள் ஏற்படுத்தின. அத்துடன், ஏற்கெனவே நெருக்குதலுக்கு உள்ளாகியிருந்த உலக விநியோக சங்கிலிக்கு புதிய நெருக்குதலை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பெரிய தொழில் நிறுவனங்களான ஹியுண்டாய், போஸ்கோ போன்ற நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
இதுபோல் மீண்டும் விநியோக சங்கிலி, உற்பத்தி, எற்றுமதி போன்றவற்றில் இடையூறு ஏற்பட்டால் அது பணவீக்க அச்சத்துக்கு வழிவிடுவதோடு கொள்ளைநோய்க்கு பிந்திய பொருளியல் மீட்சியையும் பாதிக்கக்கூடும்.
இந்தப் பிரச்சினையில் பெரும்பாலும் சுயதொழில் புரியும் கனரக வாகன ஓட்டுநர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கும் வகையில் மானியங்கள் வழங்கப்படுவதை டிசம்பருக்குப் பின்னும் நீட்டிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
தற்போதைய நிலையில் கொள்ளைநோய் சமயத்தில் வழங்கப்பட்ட இந்த மானியங்கள் டிசம்பர் மாதம் முடிவடைகின்றன. வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க அரசு அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
எனினும், இது குறித்த சட்ட வடிவு நாடாளுமன்றத்தில் முடங்கிக் கிடக்கிறது. தென்கொரிய அரசாங்கமும் நாட்டின் ஆளும் கட்சியும் இந்த மானியங்களை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
ஆனால் இந்த சலுகையை லாபகரமான வழித்தடங்களில் செல்லும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துள்ளது.
"இந்த அதிர்ச்சி தரும் வேலைநிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் இறங்கினால், அது விலைவாசி, வட்டி விதிதம் போன்றவை விண்ணைத் தொடும் இவ்வேளையில், நாட்டின் பொருளியலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்," என்று ஆளும் கட்சியின் கொள்கைப் பிரிவு தலைவர் சுங் இல் ஜோங் கூறினார்.

