பெய்ஜிங்: சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் பலியாயினர். மாண்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள். விதிமுறைகளை மீறிய வகையில் நடந்த உலோக பற்றவைப்புப் பணியே இந்த தீ விபத்துக்குக் காரணம் என்று உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்தது.
ஹேனான் மாகாணத்தில் மத்திய பகுதியில் உள்ள அன்யாங் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுப்படுத்த 63 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன என்று சீனாவின் சிசிடிவி தொலைக்காட்சி தெரிவித்தது.
இந்தத் தீ விபத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மேலும் இருவரைக் காணவில்லை எனவும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.
கொழுந்துவிட்டு எரியும் கரும்புகை நாலாபக்கமும் சூழ்ந்திருந்த காட்சியை அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. தீயணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அன்று பின்னிரவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அந்தத் தொழிற்சாலையைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவரை காவல்துறை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.
அன்யாங் தீ விபத்தைத் தொடர்ந்து, தையுவான் என்னுமிடத்தில் ஒரு ராசாயன தொழிற்சாலையில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஜூன் மாதமும் இதுபோன்று, ஷாங்காய் நகரில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார்.
அதேபோல் கடந்த ஆண்டு ஜின்ஷான் மாவட்டத்தில் சினோபெக் பெட்ரோகெமிக்கல் ஆலையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
2019 மார்ச் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யான்செங் என்னுமிடத்தில் ரசாயன ஆலையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
2015ஆம் ஆண்டு, ரசாயனப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் 165 பேர் கொல்லப்பட்டனர். இதுவே சீனாவில் நடந்த மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாகக் கூறப்படுகிறது.