பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அன்றாடப் பாதிப்பு மளமளவென உயர்ந்துவரும் நிலையில் அந்நாட்டின் பெரிய நகரங்களில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்
பட்டுள்ளன.
கிருமிப் பரவலைத் தடுக்க ஆள்நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்்.
நேற்று முன்தினம் நிலவரப்படி மேலும் 28,183 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று அதைவிட குறைவாக 27,307 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஷாங்காய் நகரில் கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை எட்டியது.
ஆக அதிகமாக ஏப்ரல் மாதத்தில், ஒரு நாளில் 28,973 பேர் நோய்வாய்ப்பட்டனர்.
தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் புதிதாக 1,476 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து, பெய்ஜிங்கில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து கல்வி கற்கும் படி மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் கடைகளும் உணவகங்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
முடக்கநிலை தொடரக்கூடும் என்று அந்நகர மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொவிட்-19 நெருக்கடிநிலையால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்
பட்டுள்ளது.
இதற்கிடையே, முழு பாதுகாப்பு ஆடை அணிந்திருந்த சுகாதாரத்துறை ஊழியர்களுடன் செங்சோ நகரைச் சேர்ந்த மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகள் போட்ட தடுப்புகளை மக்கள் உடைத்தெறிந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் சுகாதார அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்
தளங்களில் வலம் வந்தன.
ஷாங்காய் நகருக்குச் செல்வோர் ஐந்து நாள்களுக்குப் பொது இடங்களுக்குச் செல்லக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விதிமுறை நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளது.
ஷாங்காய் நகருக்குச் செல்வோர் உணவகங்கள், மதுபானக்கூடங்கள், கடைத்தொகுதிகள், பேரங்காடிகள், ஈரச்சந்தைகள், இணைய நிலையங்கள், பொழுது போக்கு நிலையங்கள் போன்ற இடத்துக்குச் செல்ல முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பெய்ஜிங்கில் கடந்த வாரயிறுதியில் கொவிட்-19 காரணமாக ஒருவர் மாண்டார்.
இதையடுத்து, பொது இடங்களுக்குச் செல்வதற்கு முன்பு, அல்லது பேருந்தில் பயணம் செய்வதற்கு முன்பு பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு கிருமித்தொற்று இல்லை என்று பெய்ஜிங்வாசிகள் உறுதி செய்ய வேண்டும்.

