கோலாலம்பூர்: மலேசியாவின்
பிரதமராக அன்வாரை ஏற்க முடியாது என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் முகைதீன் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகைதீன் தெரிவித்தார்.
115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து கையொப்பமிட்ட ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக அவர் கூறினார்.
அந்த 115 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பத்து பேர் தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.
தமக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மாமன்னர் அரண்
மனையிடம் சமர்ப்பித்ததாகவும் முகைதீன் கூறினார். மலேசியப் பிரதமராகத் தாம் பதவி ஏற்று நாட்டை வழிநடத்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை அன்வார் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று முகைதீன் சவால் விட்டார்.
தேர்தலில் 73 தொகுதிகளைக் கைப்பற்றிய பெரிக்காத்தான் நேஷனலில் தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சி அங்கம் வகிக்கிறது.
அன்வாருடன் இணைந்து ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க மாமன்னர் விடுத்த கோரிக்கையை முகைதீன் நிராகரித்ததை அடுத்து, அவர் கடுமையான விமர்சனங்
களுக்கு ஆளாகியுள்ளார்.

