கோலாலம்பூர்: மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சித் தலைவர் லிம் குவான் எங், சரவாக் அரசாங்கத்திடமும் அம்மாநில மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தாம் கூறிய கருத்து கள் சரவாக் அரசாங்கம் மற்றும் மக்களின் மனதைப் புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
கசப்புணர்வுகளை ஒதுக்கி, புதிய நல்லுறவுடன் சரவாக்கை ஆட்சி செய்ய வேண்டும் என்று பினாங்கு மாநிலத்தின் பாகான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லிம் கேட்டுக்கொண்டார். மலேசியாவின் பன்முகத்தன்மையைக் கட்டிக்காப்பது மிகவும் முக்கியம் என்றும் அனை
வரையும் உள்ளடக்கும் சமுதாயம் அவசியம் என்றும் திரு லிம் தெரிவித்தார்.
"நாட்டின் எதிர்காலம் மிகவும் முக்கியம். உறவைப் புதுப்பித்து, ஒத்துழைத்து நாட்டின் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம். அப்போதுதான்
மலேசிய தீபகற்பம், சாபா, சரவாக் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து மலேசியர்களும் பலன் அடைவர்," என்றார் திரு லிம்.
இதற்கு முன்னதாக, ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக், சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி அபாங் ஹாஜி ஒபெங்கை சரவாக் தலைநகர் கூச்சிங்கில் சந்தித்துப் பேசினார்.
"நட்புணர்வுடன் கலந்துரையாடினோம். சரவாக் அரசாங்கம் மற்றும் மக்களின் மனதைப் புண்படும் வகையில் ஜனநாயக செயல் கட்சி கருத்து ஏதும் தெரிவித்திருந்தால் அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு தெரிவித்துக்கொள்வதாக அபாங் ஜொஹாரியிடம் தெரிவித்துக்கொண்டேன்," என்று திரு லோக் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஜனநாயக செயல் கட்சி கேட்ட மன்னிப்பை முழுமனதுடன் சரவாக் அரசாங்கமும் மக்களும் ஏற்றுக்கொள்வதாக அம்மாநிலத்தின் சுற்றுப்
பயணத்துறை அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார். மிகப் பெரிய மனதுடன் சரவாக்கிற்கு நேரில் வந்து திரு லோக் மன்னிப்பு கேட்டதை அவர் சுட்டினார்.
"கடந்த பல ஆண்டுகளாக சரவாக் கட்சிகளுக்கும் ஜனநாயக செயல் கட்சிக்கும் இடையே கசப்புணர்வு இருந்தது. ஜனநாயக செயல் கட்சியின் தலைமை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதை அடுத்து, எல்லாம் சரியாகிவிட்டது. சிதைந்து கிடந்த உறவு இனி சீரான, நட்புப் பாதையில் செல்லும்," என்றார் திரு கரீம். திரு லிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது குறித்து திரு கரீம் மகிழ்ச்சி தெரிவித்தார். "திரு லிம் முன்பு கொட்டிய வார்த்தைகள் சரவாக்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. சரவாக் நொடித்துப்போகும் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அவர் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இது வரவேற்கத்தக்கது,"
என்றார் திரு கரீம்.

