கோலாலம்பூர்: மலேசியாவின் பத்தாவது பிரதமராக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மற்றும்
கெஅடிலான் கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம் நேற்று பதவி ஏற்றார். இந்நிலையில், மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் நியமிக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடும் வகையில் ஒன்றுகூடல்கள், பேரணிகள் ஆகியவற்றை நடத்த வேண்டாம் என்று ஆதரவாளர்களை கெஅடிலான் கட்சித் துணைத் தலைவரும் சிலாங்கூரின் பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிசி ராம்லி கேட்டுக்கொண்டார்.
அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என்றும் வன்முறையைத் தூண்டக்கூடிய கருத்துகள் தெரிவிப்
பதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"அன்வாரின் பிரதமர் பதவி ஏற்பைக் கொண்டாடும் வகையில் பேரணிகள், ஒன்றுகூடல்களை நடத்த வேண்டாம். அத்தகைய நிகழ்வுகள் எதிர்த்தரப்பினரைச் சினம் அடையச் செய்யக்கூடும். சமூக ஊடகத்தில் பதிவிடும் கருத்துகளில் கவனம் தேவை. அவற்றைக் காரணம் காட்டி வன்முறை வெடிக்கக்கூடும்," என்று திரு ரஃபிசி எச்சரிக்கை விடுத்தார். அன்வாரின் பிரதமர் பதவி ஏற்பு, மலேசியர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் மலேசி யாவின் வளர்ச்சி, மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"மலேசியர்கள் அனைவரும் அடுத்த அத்தியாயத்தை நோக்கி முன்னேற வேண்டும். மலேசியாவின் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும். இனம், சமயம், மாநிலம், குடும்பப் பின்னணி ஆகியவற்றைப் பார்த்திராது மலேசியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.
"மலேசியாவின் பத்தாவது
பிரதமராக அன்வாரை நியமித்ததற்காக கெஅடிலான் கட்சி சார்பாகவும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் உள்ள நண்பர்கள் சார்பாகவும் மாமன்னரிடம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஐக்கிய அரசாங்கத்துக்கு அன்வார் தலைமை தாங்குவார்," என்றார் ரஃபிசி. இதற்கிடையே, அமைதியாக இருக்கும்படி தமது ஆதரவாளர்களை பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று முன்தினம் கேட்டுக்கொண்டார். நாட்டின் நலனைப் பாதுகாக்க முயற்சி கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். பாஸ் கட்சி உண்மையின் பக்கம் இருப்பதாக அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

