அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அது மன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்றால், நாடாளுமன்றம் பகுதிவாரி வரவுசெலவுத் திட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்கலாம் என்று மலேசிய முன்னாள் நிதியமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
இப்படி செய்வதற்கு அரசியல் சாசனப் பிரிவு 102 (a) அனுமதி அளிப்பதாக அவர் கூறினார்.
"இதன்படி, அடுத்த நிதியாண்டுக்குள் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஒப்புதல் பெற கால அவகாசம் இல்லை எனில், பகுதிவாரி வரவுசெலவுத் திட்டம் ஒன்றுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கலாம்.
"இதன்மூலம், இவ்வாண்டு ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்துக்கு மாறாக, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பகுதிவாரி வரவுசெலவுத் திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் பெற நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டலாம்," என்று திரு ஸஃப்ருல் இன்று வெள்ளிக்கிழமை தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
"சிலர் பகுதிவாரி வரவுசெலவுத் திட்டத்துக்கு தாக்கல் செய்வதற்கு பதில் அடுத்த ஆண்டு வரை காத்திருக்கலாமே எனக் கேட்கலாம். ஆனால், இதனால் என்ன ஆகும் என்றால் அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்த இயலாது.
"அரசாங்கம் இந்த இடைக்காலத்தில் பொதுச் சேவை நடவடிக்கைகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், உடற்குறையுள்ளோர், வசதி குறைந்த குடும்பங்கள் ஆகியோரின் தேவைகளையும் அரசு கவனிக்க வேண்டும்.
"அத்துடன், மானியங்களும் அறிவிக்கப்பட வேண்டும்.
"இதனால்தான், நாடாளுமன்றம் இதுபோன்ற சூழல்களில் பகுதிவாரி வரவுசெலவுத் திட்டத்துக்கு வழிவகை செய்துள்ளது," என்று அவர் விளக்கினார்.


