கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்மின் ஐக்கிய அரசாங்கத்தில் சேர்வது குறித்து தமது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக பாஸ் எனப்படும் மலேசிய இஸ்லாமிய கட்சி கூறியுள்ளது.
இதுபற்றிக் கூறிய பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளரும் முன்னாள் சட்ட அமைச்சருமான தாக்கியுடின் ஹசான், "பிரதமர் தனது ஐக்கிய அரசாங்கத்தில் சேர அழைப்பு விடுத்திருப்பதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என நேற்றுத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திரு தாக்கியுடின், 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் தலைமைத்துவம் தொடர்பாக எழுந்த சிக்கல் சுமுகமாகவும் அமைதியாகவும் தீர்க்கப்பட்டதற்கு பாஸ் நன்றிக்கடன் பட்டுள்ளது. இதில் தங்கள் கட்சி மாமன்னரின் முடிவை ஏற்பதாக அவர் கூறினார்.
"மாமன்னரை மதிப்பதுடன் அவர் தனக்குள்ள அதிகாரத்தின்படி, குறிப்பாக கூட்டரசின் அரசியல் சாசனத்தின்படி, அவர் பிரதமர் தேர்வில் எடுத்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்," என்று அவர் சொன்னார்.
முன்னதாக, வியாழனன்று அன்வார் இப்ராகிம் 24 ஆண்டுகள் காத்திருந்த பின் அன்வார் இப்ராகிம், 75, மலேசியாவின் 10வது பிரதமராக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவருமான அவர், இம்மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டும் திட்டத்தில் உள்ளார். அன்று நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக தமது அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார் திரு அன்வார்.
மலேசிய மாமன்னர் அன்வார் இப்ராகிம்மை பிரதமர் பதவிக்காக தேர்வு செய்த முடிவை ஏற்க பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் முகைதீன் யாசின் மறுத்ததைத் தொடர்ந்து மேற்கூறியபடி நடந்தது. இது குறித்துப் பேசிய முகைதீன் யாசின், தமக்கு 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதற்கான ஆதாரத்தை மாமன்னரிடம் தாம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறி பிரதமர் பதவிக்கு அன்வார் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தார்.
இதற்கிடையே, திரு முகைதீன் யாசின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசின் குறை, நிறைகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி தமது கூட்டணி செயல்படும் என்று கூறியுள்ளார்.
"பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் வழி மக்கள் குரலை எதிரொலிக்கும். மக்கள் நலனுக்கும் நாட்டின் வளப்பத்துக்கும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்," என்று திரு முகைதீன் யாசின் விளக்கினார்.

