கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சாபா மாநிலத்தில் ஆறு இடங்களைக் கைப்பற்றிய அரசியல் கட்சி ஒன்று தனது ஐக்கிய அரசாங்கத்தில் இணையும் என்றும் அப்போது தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிட்டும் என்றும் தெரிவித்துள்ளார். கபுங்கான் ரக்யாட் சாபா (ஜிஆர்எஸ்) கட்சி, ஐக்கிய அரசில் இணைய இணங்கியுள்ளதாக நேற்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் எங்கள் பலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால் நாட்டின் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதுடன் பொருளியலை முன்னோக்கிக் கொண்டு செல்ல இது கைகொடுக்கும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கத்தைவிட புதிய அரசாங்கத்தில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அத்துடன் அவர்களது சம்பளமும் குறைக்கப்படும் என்றும் பிரதமர் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களின் நிலை கருதி, தாம் சம்பளம் எதுவும் பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கீழவையில் அவரது ஐக்கிய அரசாங்கத்தில் உள்ள மிகப் பெரிய அணிகளில் அவரது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 82 இடங்களையும், பாரிசான் நேசனல் 30 இடங்களையும், கபுங்கான் பார்ட்டி சரவாக் 23 இடங்களையும் கொண்டுள்ளது.
எனவே, இப்போது ஐக்கிய அரசாங்கம் மொத்தம் 135 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 222 இடங்களைக் கொண்ட கீழவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை.

