மலேசிய அரசியலில் அன்வார் இப்ராகிம் என்ற பெயரைக் கேட்டாலே அவர் சந்தித்த இமாலய சவால்கள், சோதனைகள் பற்றிதான் நினைவுக்கு வரும்.
இருந்தாலும், முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்பதற்கேற்ப சவால்களையும் சோதனைகளையும் மனந்தளராமல் முறியடித்த அன்வார், கிட்டத்தட்ட 24 ஆண்டு கால இடைவிடா போராட்டத்திற்குப் பிறகு கடந்த வியாழனன்று மலேசியாவின் பத்தாவது பிரதமராகப் பதவி ஏற்றார்.
அண்மையில் நடந்து முடிந்த 15வது மலேசியப் பொதுத் தேர்தலில் மக்கள் புதுமையான பல முடிவுகளைச் செய்து இருக்கிறார்கள்.
எந்த ஒரு கட்சிக்கும் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மலேசிய வரலாற்றில் முதன்முதலாக தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது.
அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆகஅதிகமாக 82 தொகுதி களைக் கைப்பற்றியது. அதில் அன்வாரின் சொந்த கட்சியான பிகேஆர் கட்சி 31 இடங்களைப் பெற்றது.
அன்வார் அணியில், சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஜனநாயக செயல் கட்சி 40 இடங்களை வென்றது.
தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சி மற்ற எல்லாக் கட்சிகளையும்விட ஆக அதிகமாக 49 தொகுதிகளில் வென்றது. இந்தக் கட்சி இரண்டாவதாக ஆக அதிக இடங்களைப் பெற்ற பெரிக்காத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கிறது.
இவ்வளவு காலமாக மலாய் மேலாதிக்கம், உரிமைகள் ஆகியவற்றைத் தூக்கிப் பிடித்த அம்னோ ஓரங்கட்டப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு நிலையில், பெரும்பான்மை இல்லாமல் நாட்டின் பத்தாவது பிரதமராக பதவி ஏற்று இருக்கும் அன்வார், பத்தில் தானே முத்து என்பதை மெய்ப்பிக்க முயல்வார் என்றும் அதில் அவர் வெற்றி பெறுவார் என்றும் அவரின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.
மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனமாகவும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் அன்வார் இருக்கிறார். நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமை, வாய்ப்புகள் கிடைப்பதை அவர் உறுதி செய்தாக வேண்டும்.
மாமன்னரின் கட்டளைக்கு ஏற்ப ஊழல் இல்லாத, இனம், சமயம், மாநிலம், குடும்பப் பின்னணி அடிப்படையில் எவ்வித பாகுபாடும் இல்லாத, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் இமாலய சவாலை அன்வார் எதிர்நோக்குகிறார்.
அத்துடன், விலைவாசியைக் குறைப்பது, பொருளியலை உயிர்ப்பித்து மேம்படுத்துவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, கல்வித் தரத்தை உயர்த்துவது போன்ற முக்கியப் பணிகளில் அன்வார் உடனடியாகத் தீவிரம் காட்டி வெற்றி காண்பார் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
நினைத்துப் பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும் எதிர்பார்ப்புகள், கொஞ்சம் அயர்ந்தாலே போதும் அன்வாரின் அரசியல் தலைமைத்துவம் ஆட்டம் கண்டுவிடும் என்ற நிலையில் அரசியல் சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில் அன்வாரின் தலைமைப் பயணத்தில் ஒவ்வொரு நிமிடமும் சவால்களுக்குப் பஞ்சமிருக்காது.
என்றாலும்கூட அரசியல் வாழ்க்கை கற்றுக்கொடுத்த விலைமதிப்பற்ற பாடங்கள், தனது கசப்பான அனுபவங்கள், மனப் பக்குவம் எல்லாம் அன்வாருக்கு இம்முறை கைகொடுத்து வழிகாட்டும் என்று நம்ப இடம் உண்டு.
மலேசியத் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் 1993ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் அன்வார்.
ஊழல், முறையற்ற பாலியல் நடவடிக்கை ஆகிய குற்றங்களைப் புரிந்ததாக காரணம் காட்டி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அன்வார் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் பொங்கி எழுந்தும் 1999ஆம் ஆண்டில் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அன்வாருக்குத் தூணாக இருந்து அவர் சார்பாக அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர் அவரது மனைவி டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில்.
அன்வார் மீதான முறையற்ற பாலியல் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் 2004ஆம் ஆண்டு விடுதலை யானார். ஆனால் 2014ஆம் ஆண்டில் சிலாங்கூரின் முதல்வராகும் நோக்கில் காஜாங் சட்டமன்ற இடைத்தேர்தலில் அன்வார் போட்டியிட இருந்தபோது அதே குற்றத்தைக் காரணம் காட்டி அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மகாதீர் முகம்மது தான் பிரதமராக பதவி வகித்தபோது அன்வாரை 1998ல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார். பிறகு பக்கத்தான் ஹரப்பான் 2018ஆம் ஆண்டில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தபோது மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்ற மகாதீர் முகம்மது, கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்குப் பின் பொறுப்பை அன்வாரிடம் தருவதாக உறுதி அளித்தார். அன்வாருக்கு மாமன்னரிடமிருந்து பொது மன்னிப்பு கிடைக்கவும் அவர் காரணமாக இருந்தார்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவிவிட்டனர் என்று காரணம் காட்டி பதவி விலகினார் டாக்டர் மகாதீர். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் அன்வார்.
இது அன்வாருக்கு மீண்டும் இழைக்கப்பட்ட துரோகம் என்று அதிருப்திக் குரல்கள் எழுந்தன.
அன்வார் இப்போது பிரதமர் பதவி வகிப்பதற்கு மலேசிய மாமன்னர் அப் துல்லா அகமது ஷா சரியான நேரத்தில் எடுத்த உறுதியான முடிவே காரணம்.
அரசியல் இழுபறிக்கு மாமன்னர் முற்றுப்புள்ளி வைத்தார். அன்வாரையும் பிரதமர் பதவிக்காக அடிபோட்ட பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசினையும் அழைத்து ஐக்கிய அரசுஅமைக்க மாமன்னர் அழைத்தார்.
அன்வார் இதற்கு இணக்கம் தெரிவிக்க, முகைதீன் மறுத்துவிட்டார். மாமன்னர் சொன்ன சொல்லை மதித்து பெரும்பாலான கட்சிகள் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்ததும் நீண்டகாலமாக எட்டாக் கனியாக இருந்த பிரதமர் பதவி அன்வாருக்குக் கிடைத்துவிட்டது.
அன்வார் உச்சத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில், லங்காவியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த டாக்டர் மகாதீர் அரசியலில் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டார்.
அன்வாரின் முதல் சவால் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை அவர் மெய்ப்பிக்க வேண்டும். இதற்காக அவர் நாடாளுமன்றத்தை டிசம்பர் 19ஆம் தேதி கூட்டுகிறார். அன்வாருக்குப் பெரும் பான்மை ஆதரவு இருக்கும், அவரின் அரசியல் தலைமைத்துவம் தொடரும் என்று நம்புவோம்.

