பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அன்வார் இப்ராகிம் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, அவரது புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பு கொடுக்கப்படக்கூடும் என்பது குறித்து பல யூகங்கள் நிலவுகின்றன.
புதிய அமைச்சரவையில், 30 விழுக்காடு பக்கத்தான் ஹரப்பானுக்கும் பாரிசான் நேஷனலுக்கு 20 முதல் 30 விழுக்காடும், மீதமுள்ள இடம், சாபா, சரவாக்கின் கட்சிகள், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, இரு துணைப் பிரதமர் பதவிகளுக்குக் கடும் போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான கபுங்கான் சரவாக்கின் (ஜிபிஎஸ்) ஃபாடில்லா யூசோப் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற யூகங்களுக்கு மத்தியில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவர் முகமது ஹசான் துணைப் பிரதமராககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது, தமது கூட்டணி இரண்டு துணைப் பிரதமர்களை நியமிக்கும் என்று அன்வார் கூறியிருந்தார்.
கிழக்கு மலேசியாவில் இருந்து ஒருவரும் தீபகற்ப மலேசியாவில் இருந்து ஒருவரும் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தேசிய பேராசிரியர்கள் மன்றத்தின் மூத்த உறுப்பினரான டாக்டர் ஜென்ரி அமிர், நடுநிலைமை அரசியல்வாதியாக கருதப்படும் முகமது ஹசான் துணைப் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொன்னார்.
"ஜிபிஎஸ் கட்சியுடன் ஒப்புக்கொள்ளப்பட்டதையும் பக்கத்தான் நிறைவேற்றியாக வேண்டும். ஃபடில்லா கடுமையாக உழைக்கும் நல்ல அமைச்சர் என்பதால், அவரும் துணைப் பிரதமர் பதவிக்கு ஏற்றவர்," என்றார் அமிர்.
அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின்னும் ஜிபிஎஸ் கட்சியின் ஃபடில்லா, துணைப் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் என்றார்.
"கூட்டணிக் கட்சிகளைச் சேர்ப்பது இன்னமும் முடிவுக்கு வராததால், புதிய அமைச்சரவையை இப்போதைக்குக் கணிக்கமுடியாது. திங்கட்கிழமை புதிய அமைச்சரவை அறிவிக்கப்படக்கூடும்," என்றார் அவர்.
இதற்கிடையே, பாரிசான் நேஷனல் கூட்டணியின் தலைவரும் அம்னோவின் தலைவருமான அகமது ஸாஹிட் ஹமிடி துணைப் பிரதமர் பதவிக்கான சிறந்த வேட்பாளர் என்று அம்னோ உயர்மட்ட குழு உறுப்பினரான முகமது ரஸ்லான் ரஃபி சொன்னார்.
இது கட்சியின் படிநிலை, கட்சி முடிவின் அடிப்படையிலானது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, டோக் மாட் என்று அறியப்படும் அம்னோவின் துணைத் தலைவரான முகமது ஹாசன் துணைப் பிரதமர் பதவிக்கு ஏற்றவராக இருப்பார் என்று அம்னோவின் இளையர் பிரிவு உறுப்பினரான முஹம்மது முக்காரபின் மொக்தர்ருதீன் கூறியிருந்தார்.
தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஹாரி கானி, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லி ஆகிய இருவரில் ஒருவர் நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படக்கூடும் என்றும் அவர் சொன்னார்.

