செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
81cf18d8-1f87-4db5-8266-b6f96b69ca42
-

வடகொரியாவுடன் இணைந்து செயல்படத் தயார்: சீனா

சோல்: வட்டார, உலகத்தின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக வடகொரியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஸி ஸின்பிங், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிடம் சொன்னதாக வடகொரியா கூறியுள்ளது.

சீன அதிபர் ஸி மூன்றாவது முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக சென்ற மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு வடகொரியா அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு ஸி அனுப்பிய பதிலில் இவ்வாறு கூறப்பட்டிருந்ததாக கேசிஎன்ஏ ஊடகம் கூறியது.

வடகொரியா அண்மையில் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனையை நடத்தியதற்கு மத்தியில் சீனா இவ்வாறு கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் வடகொரியா அப்போது சொன்னது.

வடகொரியாவின் மிக முக்கிய நட்பு நாடான சீனா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வடகொரியாவைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்று விரும்புவதாக அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பிற்கு டுவிட்டர் தடை விதித்தது தவறு: மஸ்க்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய அதிபர் டோனால்ட் டிரம்ப்பிற்கு, டுவிட்டர் தடை விதித்தது பெரும் தவறு என்றும் அது சரி செய்யப்பட வேண்டும் என்றும் அதன் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

இருப்பினும், வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கு டுவிட்டர் தொடர்ந்து தடை விதிக்கும் என்றும் அவர் சொன்னார்.

"சட்டபூர்வமாக அவர் எந்த விதிமுறைகளையும் மீறாதபோது, அவருக்குத் தடை விதித்தது பெரும் தவறு. இது பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களிடம் டுவிட்டர் மீதான நம்பிக்கையை குறைத்துவிட்டது," என்று மஸ்க் டுவிட் செய்திருந்தார். டிரம்ப்பை டுவிட்டரில் மீண்டும் அனுமதிப்பது குறித்த மஸ்க்கின் வாக்கெடுப்பிற்குக் குறைவான ஆதரவே கிடைத்திருந்தது. ஆனால், டுவிட்டருக்குத் திரும்புவதில் தமக்கு விருப்பமில்லை என்றும் தமது சொந்த சமூக ஊடகத்தையே பயன்படுத்தப் போவதாகவும் டிரம்ப் சொன்னார்.

தோல் புற்றுநோய் விழிப்புணர்வு; 2,500 பேர் நிர்வாண ஒன்றுகூடல்

சிட்னி: தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியின் போண்டி கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 பேர் நிர்வாணமாக ஒன்று கூடினர்.

தோல் பரிசோதனை செய்துகொள்ள ஆஸ்திரேலியர்களை ஊக்குவிக்கும் நோக்கில், அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இவ்வாறு ஒன்றுகூடினர். ஆஸ்திரேலியாவில் கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. தோல் புற்றுநோயால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக ஆஸ்திரேலியா உள்ளது என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் கூறுகிறது.