நாடு முழுவதும் பரவிய ஆர்ப்பாட்டம்; கொவிட்-19 கொள்கையில் மாற்றமில்லை என்கிறது சீன அரசாங்கம்; ஸி பதவி விலகக் கோரிக்கை
பெய்ஜிங்: சீனா, தனது நாட்டில் இருந்து கொவிட்-19 தொற்றை முற்றிலும் துடைத்தொழிக்கும் முயற்சியில் விடாப்பிடியாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக மக்கள் வெளியேறத் தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அது அமல்படுத்துகிறது.
இதனால் சலிப்படைந்த மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். தலைநகர் பெய்ஜிங்கி லிருந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் தனது நீண்டகால கொவிட்-19 கொள்கையில் மாற்றமில்லை என்ற அறிகுறியை சீன அரசாங்கம் வெளிப்படுத்தி யிருக்கிறது.
கம்யூனிசக் கட்சியின் அதிகாரபூர்வ ஊடகமான பீப்பீள்ஸ் டெய்லியில் நேற்று முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கொவிட்-19 கொள்கை நிலைத்து இருக்கும். அப்படி நிலைத்து நிற் பதன் மூலமே வெற்றி கிடைக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.
பிரச்சினையைக் குறைத்து மதிப்பிடுதல், அலட்சியப்படுத்துதல் போன்ற தவறான அணுகுமுறைகளை சரி செய்துகொள்ள வேண்டும் என்றும் ஷெங்யின் என்பவரின் பெயரில் எழுதப்பட்ட ஆசிரியர் கட்டுரை வலியுறுத்தியது.
இதற்கிடையே பெய்ஜிங்கில் உள்ள சிங்ஹுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொவிட்-19 முடக்கத்திற்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகள் வெளிச்சம் போட்டு காட்டின.
சிங்ஹுவாவில் இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அருகில் உள்ள பீகிங் பல்கலைக்கழகத்தையும் தொற்றி யது. அங்கும் எதிர்ப்புக் கூட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் பல நகரங்களில் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசிய சிங்ஹுவா மாணவர் ஒருவர், பல்கலைக்கழக உணவகத்தின் வாயிலில் சில மாணவர்கள் பதாகைகளை ஏந்தி நின்றதாகவும் தொடர்ந்து அதிக மாணவர்கள் இதில் சேர்ந்துகொண்டதாகவும் இப்போது 200 முதல் 300 மாணவர்கள் கூடியிருப்பதாகவும் தெரிவித்தார்.
சீன மாணவி ஒருவர் வெற்றுத் தாளை ஏந்தி நின்று கொண்டிருந்தார். இது, கட்டுப்பாடுகளுக்கு எதிரான அடையாளப் போராட்டமாக மாறி பல மாணவிகளும் அதில் சேர்ந்துகொண்டனர்.
உணவகத்தின் வாயிலில் ஏராளமான மாணவர்கள் கூடியிருந்த புகைப்படங்களை சில மாணவர்கள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டனர்.
"இது, எங்கள் இயல்பான வாழ்க்கை அல்ல. எங்களுடைய வாழ்க்கை முன்புபோல இல்லை என்று எதிர்ப்புக் கூட்டங்களில் ஒலி பெருக்கி அலறியது.
பெய்ஜிங்கில் மட்டுமல்லாமல் நான்ஜிங் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் அதிபர் ஸி பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாக மாணவர்கள் முழங்கியதாக பிபிசி தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் ஷாங்காயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் அள்ளிச் சென்றதைப் பார்த்ததாக பிபிசி கூறியுள்ளது.
வடமேற்கு நகரமான உரும்கியில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே தீ விபத்தில் பத்து பேர் கொல்லப்பட்டதால் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமாகியுள்ளது என கூறப்படுகிறது.

