சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டை உலகின் வலிமைவாய்ந்த அணுசக்தி நாடாக உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக அண்மையில் ஏவுகணை பாய்ச்சுவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அவர் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
இம்மாதம் 18ஆம் தேதி இவாசோங்-17 சோதனைக்குப் பிறகு தனது அணுசக்தி இலக்கு குறித்து அதிபர் கிம் அறிவித்திருந்தார்.
ஹிவாசோங்-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்.
அமெரிக்காவின் அணுவாயுத மிரட்டலிலிருந்து நாட்டை பாதுகாக்கவும் அவர் உறுதி கூறினார்.
உலகின் சக்திவாய்ந்த உத்திபூர்வ ஆற்றலைக் கொண்டிருப்பதே வடகொரியாவின் இறுதி இலக்காகும் என்று அதிகாரிகளின் பதவி உயர்வு உத்தரவின்போது அதிபர் கிம் தெரிவித்தார். நாட்டின் கண்ணியத்தையும் இறையாண்மையையும் நம்பத்தகுந்த முறையில் பாதுகாக்கும் வகையில் அணுசக்தி ஆற்றல் மேம்படுத்தடுப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஹுவாசோங்-17ஐ நாட்டின் வலிமையான ஆயுதம் என்று வருணித்தார்.
இது, வடகொரியாவின் உறுதியையும் உலகின் வலிமையான ராணுவத்தை உருவாக்கும் திறனையும் நிரூபித்திருப்பதாக அதிபர் கிம் மேலும் தெரிவித்தார்.