கியவ்: தெற்கு உக்ரேனிய வட்டாரமான கெர்சனில் ரஷ்யாவின் குண்டு மழையால் 32 பேர் கொல்லப்பட்டனர் என்று அவ்வட்டார காவல் துறை தெரிவித்தது.
இம்மாதம் 11ஆம் தேதி கெர்சன் வட்டாரத்திலிருந்து ரஷ்யா தனது படையை விலக்கிக் கொண்டதால் அவ்வட்டாரம் மீண்டும் உக்ரேன் வசமானது. ஏறக்குறைய ஒன்பது மாத ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்யா தனது பிடியை விட்டுக் கொடுத்தது.
இந்த நிலையில் முதல் முறையாக அவ்வட்டாரத்தை ரஷ்யா கடுமையாகத் தாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது நிப்புரோ கிழக்குக் கரையில் நிலைகொண்டுள்ள ரஷ்யாவின் படைகள் தொடர்ந்து அந்நகரத்தின் மீது குண்டுகளை வீசி வருகிறது.
"நாள்தோறும் ரஷ்யப் படைகள் நகரை அழித்து வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். ஆக்கிரமிப்புக்குப் பிறகு அந்நகரில் 32 பேர் உயிரிழந்தனர்," என்று தேசிய காவல்துறை தலைவர் கிலைமென்கோ தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
"நாட்டின் காமெர் பகுதியில் அதிகமான குடியிருப்பாளர்கள் அகதிகளாக குடியேறி வருகின்றனர். அதே சமயத்தில் பெரும்பாலோர் வீட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை வழங்கி வருகிறோம்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே கெர்சனில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியிருப்பதாக அதிபரின் மூத்த உதவியாளர் ஒருவர் கூ,றினார்.
கெர்சனிலிருந்து வசிக்க விரும்பாதோர் அங்கிருந்து வெளியேற உதவி செய்யப்படும் என்று கடந்த வாரம் உக்ரேன் அரசாங்கம் அறிவித்திருந்தது.
ரஷ்யத் துருப்புகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் இவ்வட்டாரத்தில் செய்த 578க்கும் மேற்பட்ட போர்க்குற்றங் களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் கிலைமென்கோ தெரிவித்தார். ஆனால் உக்ரேனின் இத்தகைய குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.

