காசாமிசியோலா டெர்மி (இத்தாலி): இத்தாலியின் சுற்றுலாத் தலமான இஸ்சியா தீவில் தொடர்ந்து பெய்த கனமழையால் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்றைய நிலவரப்படி இந்த நிலச்சரிவில் கிட்டத்தட்ட ஒன்பது பேர் மாண்டதாகவும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டது. நிலச்சரிவால் பல இடங்களில் வீடுகளும் அதன் சுற்றுப் புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மண்ணுக்குள் புதையுண்டன. சில வாகனங்கள் கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டன. ஏராளமான மீட்புப் பணியினரும் தொண்டூழியர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண் சரிவால் சாலைகள் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன. வாகனப்போக்குவரத்துகளும் மின்சார விநியோகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
தீவிலுள்ள மலை உச்சியில் இருந்து மண் கட்டிகள், பெருங்கற்கள், குப்பைக் கூளங்கள் ஆகியவை பெயர்ந்து, காசாமிசியோலா டெர்மி நகரில் உள்ள வீடுகள் மீதும் சாலைகள் மீதும் விழுந்தன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து இஸ்சியா தீவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கட்டடங்களையும் வாகனங்கள் கடலுக்குள் தள்ளப்பட்ட காட்சிகளையும் காணமுடிகிறது. அத்துடன் அங்குள்ள நீர்வீழ்ச்சியில் சேறு கலந்த தண்ணீரைக் காண முடிவதாக வட்டாரவாசி தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் அங்கு அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இஸ்சியா தீவில் ஏராளமான வீடுகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளன.
கனமழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது அவை தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மலைப்பாங்கான இடங்களே பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"இஸ்சியாவில் சில குறிப்பிட்ட இடங்கள் வாழத்தகுதி வாய்ந்தவை அல்ல என்பதை மக்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆபத்தான பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடிக்கப்படவேண்டும்," என்று கேம்பனியா ஆளுநர் வின்சென்ஸோ டி லுகா அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

