மேரிலாந்து: சிறிய ரக விமானம் ஒன்று மின்கடத்தி கோபுரம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 85,000 வீடுகளுக்கு மின் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்த வட்டாரத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து விளக்குகளும் செயலிழந்து போயின.
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள மேரிலாந்தின் மாண்ட்கோமெரி கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது.
கிட்டத்தட்ட 30 மீட்டர் உயரமுள்ள அந்த மின்கோபுரத்தில் அந்த விமானம் மோதி சிக்கி அந்தரத்தில் தொங்கியது. அதில் விமானி உட்பட இரண்டு பேர் பயணம் செய்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிச் சேவையகத்தின் பேச்சாளர் பீட்டெ பிரிங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
விமானத்தில் சிக்கியிருந்த இரண்டு பேரையும் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்புப்படையினர் நேற்று பாதுகாப்பாக மீட்டனர்.
மின்சாரக் கம்பிகளுக்கு இடையே சிக்கியுள்ள விமானத்தை மீட்கும் பணியில் தீயணைப்பு வாகனங்களும் பாரந்தூக்கிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த விமானம் நியூயார்க்கின் வெஸ்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து மேரிலாந்தில் உள்ள கெய்தர்ஸ்பர்க் நகருக்கு அருகேயுள்ள மாண்ட்கோமெரி பகுதியில் உள்ள ஏர்பார்க் விமான நிலையத்தை நோக்கிப் பறந்து சென்றதாக திரு பிரிங்கர் கூறினார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேரிலாந்தின் மோட்கோமெரி கிராமத்தில் மின்கோபுரத்தில் சிறிய விமானம் சிக்கி தொங்கியபடி உள்ள காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களையும் காணொளிகளையும் உள்ளூர் மக்கள் சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளனர்.

