கோலாலம்பூர்: மலேசியாவில் பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது குறித்து பார்ட்டி இஸ்லாம் செமலேசியா (பாஸ்) கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி, தெரிவித்திருந்த கருத்துக்காக அவர் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகக் கிண்ண காற்பந்துப்போட்டியை உலகமே கண்ணுற்றுக் கவனித்துவரும் வேளையில், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி, காற்பந்துப் போட்டி பற்றிக் கூறுவதைப் போல், மலேசியாவின் புதிய ஆட்சியமைப்பு குறித்து கருத்துக் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர், டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்தப் பதிவில், "காற்பந்துப் போட்டியின் நடுவர் ஒருவர், போட்டி நடந்து முடிந்த பின் தோற்கும் அணிக்கு தோற்றவரை எப்படியாவது வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது," என்று மறைமுகமாக புதிய ஆட்சியமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து அவரது கருத்து குறித்து இணையவாசிகளும் அரசியல்வாதிகளும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் அவரது டுவிட்டர் பதிவில், "இந்த விளையாட்டை நேரடியாகவோ, தொலைக்காட்சி மூலமோ பார்வையிடும் பார்வையாளர்கள் என்ன சொல்வார்கள்? இஸ்லாம் மதம், தன்னைப் பின்பற்றுபவர்கள் குடும்பம், சமூகம், நாடு, விளையாட்டு என அனைத்திலும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது," என்று கூறியுள்ளார்.
பாஸ் கட்சித் தலைவர் திரு ஹாடியும், பிரிபூமி கட்சித் தலைவர் முன்னாள் பிரதமர் முகைதீனும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் முக்கியத் தலைவர்களாவர்.
அன்வார் இப்ராகிம் பிரதமராக அறிவிக்கப்பட்டதையடுத்து பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கட்சி நாற்காலிக்குத் தள்ளப்பட்டன.

