அன்வார்: ஆடம்பர கார் வேண்டாம்
கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக பிரதமராகப் பதவியேற்றிருக்கும் அன்வார் இப்ராகிம், தனக்கு வழங்கப்படவிருந்த ஆடம்பர சிற்றுந்தை வேண்டாம் எனக் கூறிவிட்டார். பொதுமக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற ஆடம்பரங்களுக்குச் செலவிடவேண்டும் என்றும் பிரதமர் அலுவலகத் துறையில் இருக்கும் ஏதேனும் ஒரு வாகனத்தை நான் பயன்படுத்திக்கொள்வேன் என்றும் கூறிவிட்டார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அந்தப் பதிவில், "நான் பிரதமர் அலுவலகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னரே, பிரதமர் அலுவலகத்துக்கென 'மெர்சிடிஸ் எஸ்600' எனும் ஆடம்பர கார் ஒன்று வாங்கப்பட்டது. அதை நான் மறுத்துவிட்டேன் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் அரசாங்கத்திற்கு எவ்வகையிலும் புதிய செலவுகள் வேண்டாம் என்ற காரணத்திற்காக நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பற்றி பிரதமர் அன்வார்:
அனைவரையும் கேட்டு முடிவுசெய்வேன்
கோலாலம்பூர்: அமைச்சரவையை இறுதி செய்வதற்கு எல்லாருடைய கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
எப்போது அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்படும் என்ற கேள்விக்கு, "இயன்றவரை விரைவில் அறிவிக்கப்படும். ஏனெனில், இப்போது அமைந்திருப்பது பல கட்சிகள் ஒருங்கிணைந்த ஐக்கிய அரசாங்கம். அதனால் நான் முடிவெடுப்பதற்கு முன்னர் அனைவருடைய கருத்துகளுக்கும் நான் செவிமடுக்க வேண்டும். அதன்பின்னர்தான் இறுதி முடிவு எடுக்கப்படும்," என்று கூறினார்.

