மலேசியாவின் புதிய பிரதமர் அன்வார் இப்ராகிம், தன்னுடன் ஒத்துழைத்து உதவும்படி அந்த நாட்டின் அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலேசிய பொதுத்துறையில் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள்.
மிக முக்கிய வாக்கு வங்கியாகத் திகழும் அவர்கள்தான் அரசாங்கக் கொள்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு முக்கிய காரணம்.
பிரதமர் அன்வார், 75, சீர்திருத்த சிந்தனை உள்ளவர். ஆனால் அரசு ஊழியர்கள் வழிவழியாகவே நன்கு வேர் ஊன்றிய நியதிகளுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
பொதுத்துறை ஊழியர்களின் ஆதரவைப் பெறுவது பிரதமர் அன்வாருக்கு இப்போது உயிர்நாடியானதாக இருக்கிறது.
மலேசியாவில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுவிட்டது.
பிரதமர் பதவியைப் பிடிக்க அரசியல் தலைவர்களுக்கு இடையில் போட்டாபோட்டி இடம்பெற்றது.
கடைசியில், மாமன்னர் தலையிட்டதால் ஒருவழியாக பிரதமர் அன்வார் தலைமையில் ஐக்கிய அரசு அமைந்தது. மலேசியாவின் நிர்வாகத் தலைமை இடமான புத்ராஜெயாவில் பிரதமர் துறையில் அரசு ஊழியர்களிடம் இன்று அன்வார் உரையாற்றினார்.
"இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். என்னுடன் சேர்ந்து ஒத்துழைத்து ஆதரவு தந்து மாற்றங்களைச் சாதிக்க உதவுங்கள்," என்று தனது உரையில் பிரதமர் குறிப்பிட்டார்.
"முதுகெலும்பாகத் திகழும் அரசாங்கச் சேவையினர் என்னுடன் சேர்ந்து பாடுபடவில்லை என்றால் நான் வெற்றி பெறவே முடியாது," என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அன்வார் தேர்தல் பிரசாரத்தின் போது காரசாரமாக முழங்கியதற்கும் இன்று பேசியதற்கும் பெரும் வேறுபாடு காணப்பட்டது. பிரதமர் அன்வார் குரல் இன்று மிகவும் மென்மையாக இருந்தது.
மலேசியாவின் பொதுச் சேவை அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப பெரியது. அது, உலகிலேயே மிகப் பெரிய அரசு சேவைகளில் ஒன்று. பெரும்பான்மை மலாய்க்காரர்கள் பொதுச் சேவையில் பணியாற்ற விரும்புவது வழமை.
தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இருக்கும் புத்ராஜெயாவில்தான் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வசிக்கிறார்கள். அண்மைய தேர்தல்களில் அவர்கள் மலாய் ஆதரவு கூட்டணிகளுக்கே பெரும்பான்மையாக ஆதரவளித்து வந்துள்ளனர்.