ஒத்துழைப்புத் தரும்படி அரசாங்க ஊழியர்களிடம் அன்வார் வேண்டுகோள்

ஒத்துழைப்புத் தரும்படி அரசாங்க ஊழியர்களிடம் அன்வார் வேண்டுகோள்

2 mins read
93215812-f103-40ac-8adf-79798ff64375
மலே­சி­யா­வின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழி­யர்­க­ளி­டம் நேற்று பிரதமர் அன்வார் உரை­யாற்­றி­னார். படம்: மலேசிய தகவல் துறை -

மலே­சி­யா­வின் புதிய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், தன்­னு­டன் ஒத்­து­ழைத்து உத­வும்­படி அந்த நாட்­டின் அரசு ஊழி­யர்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் புதிய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், தன்­னு­டன் ஒத்­து­ழைத்து உத­வும்­படி அந்த நாட்­டின் அரசு ஊழி­யர்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார். மலே­சிய பொதுத்­து­றை­யில் 1.2 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் வேலை பார்க்­கி­றார்­கள்.

மிக முக்­கிய வாக்கு வங்­கி­யா­கத் திக­ழும் அவர்­கள்­தான் அர­சாங்­கக் கொள்­கை­கள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முக்­கிய கார­ணம்.

பிர­த­மர் அன்­வார், 75, சீர்­திருத்த சிந்­தனை உள்­ள­வர். ஆனால் அரசு ஊழி­யர்­கள் வழி­வழி­யா­கவே நன்கு வேர் ஊன்­றிய நிய­தி­க­ளுக்கு உட்­பட்­ட­வர்­கள் எனக் கூறப்­ப­டு­கிறது.

பொதுத்­துறை ஊழி­யர்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வது பிர­த­மர் அன்­வா­ருக்கு இப்­போது உயிர்­நா­டி­யா­ன­தாக இருக்­கிறது.

மலே­சி­யா­வில் அண்­மை­யில் நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லில் யாருக்­கும் பெரும்­பான்மை கிடைக்­கா­மல் தொங்கு நாடா­ளு­மன்­றம் ஏற்­பட்­டு­விட்­டது.

பிர­த­மர் பத­வி­யைப் பிடிக்க அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கு இடை­யில் போட்­டா­போட்டி இடம்­பெற்­றது.

கடை­சி­யில், மாமன்­னர் தலை­யிட்­ட­தால் ஒரு­வ­ழி­யாக பிர­த­மர் அன்­வார் தலை­மை­யில் ஐக்­கிய அரசு அமைந்­தது.

மலே­சி­யா­வின் நிர்­வா­கத் தலைநகரான புத்­ரா­ஜெ­யா­வில் உள்ள பிர­த­மர் அலுவலகத்தில் அரசு ஊழி­யர்­க­ளி­டம் நேற்று அன்­வார் கன்னி உரை­யாற்­றி­னார்.

"இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு உங்­க­ளுக்கு ஓர் அழைப்பு விடுக்­கி­றேன். என்­னு­டன் சேர்ந்து ஒத்­துழைத்து ஆத­ரவு தந்து மாற்­றங்­க­ளைச் சாதிக்க உத­வுங்­கள்," என்று தனது உரை­யில் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

"முது­கெ­லும்­பா­கத் திக­ழும் அர­சாங்­கச் சேவை­யி­னர் என்­னு­டன் சேர்ந்து பாடு­ப­ட­வில்லை என்­றால் நான் வெற்றி பெறவே முடி­யாது," என்­றும் பிர­த­மர் குறிப்­பிட்­டார். அன்­வார் தேர்­தல் பிர­சா­ரத்­தின் போது கார­சா­ர­மாக முழங்­கியதற்­கும் நேற்று பேசி­ய­தற்­கும் பெரும் வேறு­பாடு காணப்­பட்­டது. பிர­த­மர் அன்­வார் குரல் நேற்று மிக­வும் மென்­மை­யாக இருந்­தது. மலே­சி­யா­வின் பொதுச் சேவை அதன் மக்­கள்­தொ­கைக்கு ஏற்ப பெரி­யது. அது, உல­கி­லேயே மிகப் பெரிய அரசு சேவை­களில் ஒன்று. பெரும்­பான்மை மலாய்க்­கா­ரர்­கள் பொதுச் சேவை­யில் பணி­யாற்ற விரும்­புவது வழக்கம்.

அண்­மைய தேர்­தல்­களில் அரசு ஊழி­யர்­கள் மலாய் ஆத­ரவு கூட்­ட­ணி­க­ளுக்கே பெரும்­பான்மையாக ஆத­ர­வ­ளித்து வந்­துள்­ள­னர்.