புக்காரெஸ்ட்: 'நேட்டோ' எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க், உக்ரேனுக்குக் கூடுதலான குளிர்கால உதவி வழங்கும்படி நட்பு நாடுகளைக் கேட்டுக்கொள்ளவிருக்கிறார்.
நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள்மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களையடுத்து, உக்ரேனியர்கள் மேலும் ஒரு வாரகாலத்திற்குக் குளிரையும் இருளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி எச்சரித்ததைத் தொடர்ந்து நேட்டோ தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுக்கவிருக்கிறார்.
ருமேனியத் தலைநகர் புக்காரெஸ்டில் நடைபெறவிருக்கும் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் உக்ரேனுக்கு ராணுவ உதவியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்பு, விமானத்திலிருந்து வீசப்படும் வெடிகுண்டுகள் ஆகியவற்றை நேட்டோ ஏற்கெனவே உக்ரேனுக்கு வழங்கி வருகிறது.
இவற்றுடன் எரிபொருள், மருத்துவப் பொருள்கள், குளிர்காலத்துக்குத் தேவைப்படும் பொருள்கள் போன்ற உதவிப் பொருள்களும் வழங்கப்படுகின்றன. இவற்றை அதிக எண்ணிக்கையில் வழங்குவது குறித்து நேட்டோ அமைச்சர்கள் கலந்தாலோசிப்பர்.
சென்ற வாரம் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலையடுத்து உக்ரேனில் மில்லியன் கணக்கானோர் தண்ணீர், மின்சாரம் ஆகியவை இல்லாமல் அவதிக்குள்ளாயினர்.
குளிர்காலமாதலால் வெப்ப சாதனத்தை இயக்க முடியாமல் அவர்கள் சிரமத்துக்கு உள்ளாயினர்.
நேட்டோவில் உறுப்பியம் பெறுவதற்கான உக்ரேனின் விண்ணப்பம் குறித்தும் அமைச்சர்கள் கலந்தாலோசிப்பர் என்று கூறப்படுகிறது.
ஸெலன்ஸ்கி: மாஸ்கோவின்
தாக்குதல்கள் தொடரும்
இவ்வேளையில், ரஷ்யாவின் கையிருப்பில் உள்ள ஏவுகணைகள் தீரும்வரை அதன் தாக்குதல்கள் தொடரும் என்கிறார் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி. உக்ரேனிய உள்கட்டமைப்புகளை இந்த வாரமும் ரஷ்யா தாக்கும் என்று அவர் முன்னுரைத்துள்ளார்.
சென்ற மாதத் தொடக்கக்தில் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்புகள்மீது மாஸ்கோ ஆகாயத் தாக்குதல்களை மேற்கொள்கிறது. ஒவ்வொரு வாரமும் தாக்குதலின் உக்கிரமும் அதிகரித்துவருகிறது.
உக்ரேனிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குவதை ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் பொதுமக்களைக் காயப்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்று மாஸ்கோ கூறுகிறது.

