பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொவிட்-19 தொடர்பான தடைகளை எதிர்த்து சென்ற வாரஇறுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோர் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ராய்ட்டர்சிடம் பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர், பெய்ஜிங் காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களைத் தொலைபேசியில் சிலர் அழைத்ததாகக் கூறினர்.
இம்மாதம் 27ஆம் தேதி இரவில் என்னென்ன செய்தார்கள் என்பது குறித்துக் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கும்படி அந்த அதிகாரிகள் கூறியதாக அவ்விருவரும் குறிப்பிட்டனர்.
மாணவர் ஒருவர், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்தாரா என்பது குறித்து எழுத்துபூர்வமாக பதில் அளிக்கும்படி கல்லூரி தன்னைக் கேட்டுக்கொண்டதாக ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், பெய்ஜிங் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் தாம் இருந்ததாகவும் அதன்பிறகு தொடர்புச் செயலிகளில் உள்ள உரையாடல்களை அழித்துவிட்டதாகவும் கூறினார்.
இருப்பினும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் குறித்து எப்படித் தெரியவந்தது என்றும் அந்த இடத்திற்குச் செல்ல என்ன காரணம் என்றும் கேட்டதாகச் சொன்னார்.
விசாரணைக்கு உரியவர்களை அதிகாரிகள் எவ்வாறு அடையாளம் கண்டனர், எத்தனை பேரிடம் இத்தகைய விசாரணையை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் போன்றவை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.
பெய்ஜிங் நகரப் பொதுப் பாதுகாப்புப் பிரிவு இதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.
இந்நிலையில், சட்டத்துக்கு உட்பட்டே மக்கள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
சீனாவில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறித்த அதிருப்தியை சென்ற வாரயிறுதியில் பல்வேறு நகரங்களில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
அதிபர் ஸி ஜின்பிங் பதவியேற்ற பிறகு நடைபெற்ற ஆகப் பெரிய ஆர்ப்பாட்டம் இது.

