தோக்கியோ: ஜப்பானில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கும் மூன்று கைதிகள், தூக்குத் தண்டனையை நீக்கும்படி அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர். இதனை அவர்களது வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான், கொலை போன்ற கடுமையான குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை கொடுப்பதை வழக்கத்தில் கொண்டுள்ளது.
ஜப்பானின் ஒசாகா மாநிலத்தில் தடுப்புக் காவலில் இருக்கும் தூக்குத்தண்டனைக் கைதிகள், கொடூரமாக தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படும் தண்டனை முறைக்கு தடைவிதிக்கக் கோரியுள்ளனர் என்று அவர்கள் சார்பில் வாதாட முன்வந்திருக்கும் வழக்கறிஞர் கியோஜி மிஸுட்டானி கூறியுள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டில் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்தக் கைதிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக அரசாங்கம் அவர்களுக்கு 33 மில்லியன் யென் (S$327,000), இழப்பீடுதர கோரியும் இந்த வழக்கை அவர்கள் தொடுத்துள்ளதாக வழக்கறிஞர் கியோஜி தெரிவித்தார்.
அனைத்துலக சமூகத்தில் மரண தண்டனையை அகற்றுவதற்கு ஆதரவு இருந்தபோதிலும் ஜப்பானில் கடுமையான குற்றங்கள் புரிவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு பொதுமக்களிடம் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கு வெற்றிபெற்றால் ஜப்பானில் நீண்டகாலமாக வழக்கில் இருந்துவரும் மரண தண்டனைக்கு முடிவுகட்டும் வகையில் பெரிய அளவில் சட்டத்தில் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் தொடர் கொலைகள் செய்த குற்றவாளிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் தூக்குத்தண்டனை நிறைவேற்றத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

