பெய்ஜிங்: சீன கம்யூனிசக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அதிபருமான ஜியாங் ஸெமின் நேற்று பிற்பகல் ஷாங்காய் நகரில் தமது 96வது காலமானார்.
1989 முதல் 2002 வரை கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1992 முதல் 2003 வரை அதிபராகவும் இருந்த ஜியாங், தற்போதைய அதிபரான ஸி ஜின்பிங்கின் இறுக்கமான பிடியில் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டுச் சென்றுள்ளார்.
'லுகேமியா' மற்றும் பல உடல் உறுப்புகள் செயலிழந்ததால் ஜியாங் இறந்துவிட்டதாக சீனாவின் அரசாங்க ஊடகமான சின்ஹுவா தெரிவித்தது.
சில காலமாக திரு ஜியாங் நோய்வாய்பட்டிருந்தார் எனச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற முக்கிய கம்யூனிச மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை.
தியானன்மென் சம்பவத்திற்குப் பிறகு கட்சியையும் நாட்டையும் வழி நடத்த திரு ஜியாங்கை பெரும் தலைவரான டெங் சியாபிங் தேர்ந்தெடுத்தார்.
1989ல் திரு ஜியாங், கட்சிக்குத் தலைவரானார். தமது ஆட்சிக் காலத்தில் திரு டெங் சியோபிங்கின் பொருளியல் சீர்திருத்தங்களை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார்.
ஹாங்காங், மக்காவ்வை முறையே பிரிட்டன் மற்றும் போர்ச்சுகலில் இருந்து சீனாவிடம் அமைதியான முறையில் ஒப்படைப்பதை அவர் மேற்பார்வையிட்டார்.
திரு ஜியாங் ஸெமின், அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையை ஏற்ற ஒரு வருடத்தில், அதாவது 1990ல் சிங்கப்பூரும் சீனாவும் அரச தந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
1978ல் மாபெரும் தலைவர் டெங் ஸியோபிங் சிங்கப்பூருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டு, அப்போதைய பிரதமர் லீ குவான் இயூவைச் சந்தித்தார். இது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு உறவு ஏற்பட வழிவகுத்தது.
இவ்வுறவை திரு ஜியாங் உள்ளிட்ட கம்யூனிசக் கட்சித் தலைவர்கள் வலுப்படுத்தி வந்தனர்.
திரு ஜியாங்கின் ஆட்சிக் காலத்தில், 1993 முதல் 1995 வரை சீனாவில் சிங்கப்பூரின் முதலீடு 444 மில்லியன் டாலரிலிருந்து 2.4 பில்லியன் டாலராக ஐந்து மடங்கு அதிகரித்தது. திரு ஜியாங், 1993 முதல் 2003 வரை அதிபராக பதவி வகித்தார்.

