சிட்னி: அதிகரித்து வரும் ஊழல், அவநம்பிக்கை உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்தி ரேலிய அரசாங்கம், ஊழலுக்கு எதிரான சட்டத்தை நேற்று நிறைவேற்றியிருக்கிறது.
இதன்படி, அரசியல்வாதிகளை விசாரிப் பதற்கான பரந்த அதிகாரங்களைக் கொண்ட தேசிய கண்காணிப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
ஆஸ்திரேலியா, ஏறக்குறைய ஊழலற்ற நாடாக இருந்தாலும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, அரசியலில் சீனாவின் தலையீடு போன்ற பிரச்சினைகள் மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
கொவிட்-19 காலத்தில் பல அமைச்சுகளில் தன்னை ரகசியமாக நியமித்துக் கொண்ட முன்னாள் பிரதமரான ஸ்காட் மோரிசன் விவகாரமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
அதே நாளில் ஊழலுக்கு எதிரான சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் நம்பிக்கை முக்கிய விவகாரமாக உருவெடுத்தது.
நேற்று நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இது, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு மிகவும் முக்கியம் என்றார்.
"நேர்மை, பொறுப்பு ஏற்பு, நம்பிக்கை ஆகியவற்றின் வெற்றியாக இந்த மசோதா திகழ்கிறது." என்று அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவின் 40 ஆண்டுகால வரலாற்றில் ஆகப்பெரிய சீர்திருத்தம் இது என்றும் அவர் வருணித்தார்.
புதிய மசோதா, அரசியல்வாதிகளை தேசிய நாடாளுமன்றத்தில் விசாரிக்க வகை செய்கிறது. 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஊழல் விசாரணை அமைப்பு உருவாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இதே போன்ற ஊழல் விசாரணை அமைப்புகள் உள்ளூர் அளவில் செயல்படுகின்றன.

