ஹாங்காங்: ஹாங்காங்கின் ஊடகத் தலைவரான ஜிம்மி லாய்க்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வழக்கு சீனாவுக்கு மாற்றப் படலாம் என எதிர்பார்க்கப்படுவதே அதற்கு காரணம்.
கடந்த 2020ல் ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம், சிக்கலான வழக்கு களை சீனாவுக்கு மாற்ற அதிகாரம் அளிக்கிறது. ஆனால் சீனா, இதுவரை அந்த அதிகாரத்தைப் பயன் படுத்தவில்லை. ஹாங்காங்கிலேயே வழக்குகளை நடத்தி வருகிறது.
முந்தைய பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங்கின் வெளிப்படைத் தன்மை, நீதித் துறை சுதந்திரம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு உள்ள உரிமை போன்ற தனிப்பட்ட மரபு களுக்காக லாயின் வழக்கை தலைநிலத்துக்கு மாற்றாமல் சீனா பொறுமையாக இருந்து வருகிறது.
'ஆப்பிள் டெய்லி' நிறுவனரான ஜிம்மி லாய்க்கு பிரிட்டிஷ் வழக்கறிஞரை அமர்த்த கடந்த வாரம் ஹாங்காங்கின் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால் பெய்ஜிங்கால் நியமிக்கப்பட்ட ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியும் சீனாவின் விசுவாசியுமான ஜான் லீ, இதுபோன்ற வழக்குகளில் வெளிநாட்டு வழக் கறிஞர்கள் பங்கேற்பதை தடுக்க தலையிட வேண்டும் என்று சீனாவின் உயர்மட்ட சட்டக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் உள்ளூர் வழக்கறிஞரை நியமிக்க முடியாத வழக்குகளை சீனாவின் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜிம்மி லாயின் வழக்கு சீனாவுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

